Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் போட்டியிடும் தமிழரான நீதன் ஷான் தனது தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.
Scarborough-Rouge Park தொகுதி இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறுகிறது.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நீதன் ஷான் உட்பட குறைந்தது மூன்று வேட்பாளர்கள், அண்மைய நாட்களில் தங்கள் தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர்.
நீதன் ஷான் தவிர Ashan Fernando, Zakir Patel ஆகியோரின் தேர்தல் பிரச்சார பதாதைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தங்கள் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்த ஒருங்கிணைந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
நூற்றுக்கணக்கான தனது தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் நீதன் ஷான், இந்த நாசவேலை குறித்து Toronto காவல்துறையிடம் புகார் அளித்ததாக கூறினார்.
அவரது பிரச்சாரக் குழு பாதுகாப்பு camera ஒளிப்பதிவுகளையும், வாகன உரிமத் தகடு இலக்கங்களையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளது.
20 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு கடந்த வார விடுமுறையில் நடைபெற்றது.
4,376 பேர் முன்கூட்டிய வாக்களிப்பில் வாக்களித்தனர்.
Scarborough-Rouge Park தொகுதிக்கான நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
