British Columbia மாகாண Conservative கட்சியின் தலைமை பதவி குறித்த இழுபறி நிலை தோன்றியுள்ளது.
கட்சியின் தலைமை பதவியில் இருந்து John Rustad பதவி நீக்கம் செய்யப்பட்டதாக B.C. Conservative கட்சி புதன்கிழமை (03) அறிவித்தது.
ஆனாலும் கட்சியின் தலைவராக தான் தொடர்ந்து நீடிப்பதாக John Rustad உறுதியளித்துள்ளார்.
Nechako Lakes தொகுதியின் மாகாண சபை உறுப்பினரான அவர், “நான் பதவி விலகவில்லை, பதவியில் இருந்து நீக்கப்படவில்லை” என ஒரு சமூக ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக John Rustad “தொழில்முறை ரீதியாக திறமையற்றவர்” என குறிப்பிட்ட Conservative இயக்குநர்கள் குழு, அவர் தலைவராக தொடர முடியாது என கருதி ஒரு தீர்மானத்தை கட்சி நிறைவேற்றியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
John Rustad தலைமையின் மீது தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக Conservative சட்ட ஆலோசகரிடம் பெரும்பான்மையான மாகாணசபை குழு கூறியதை அடுத்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
கட்சியின் இடைக்காலத் தலைவராக Trevor Halford உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.
Trevor Halford, 2020-ஆம் ஆண்டு முதன் முதலில் B.C. Liberal கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் கட்சி மூன்று ஆசனங்களில் பெரும்பான்மையை இழந்த நிலையில் இருந்து பதவி விலக பலமுறை விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க John Rustad மறுத்து வருகிறார்.
தலைமைத்துவ மாற்றத்தை எத்தனை பேர் விரும்பினாலும், Conservative அரசியலமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள் தன்னை வெளியேற்ற கட்டாயப்படுத்த அனுமதிக்கவில்லை என John Rustad கூறினார்.
“இது ஒரு அரசியலமைப்பு வழிமுறை அல்ல” என அவர் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.
கடந்த September மாதம் கட்சிக்குள் இருந்த கொந்தளிப்புக்கு மத்தியில், Conservative தலைமை மதிப்பாய்வில் வாக்களிக்கும் உறுப்பினர்களிடையே John Rustad 70.6 சதவீத ஆதரவைப் பெற்றார்.
கடந்த தேர்தலுக்குப் பின்னர், மாகாணசபை உறுப்பினர்கள் Dallas Brodie ,Tara Armstrong ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறி OneBC கட்சியை உருவாகியுள்ளனர்.
மேலும் Conservative மாகாணசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேர் இப்போது சுயேச்சைகளாக சபையில் அமர்ந்துள்ளனர்.
LJI Reporter ரம்யா சேது
