Toronto மாவட்டக் கல்வி சபை (TDSB) உறுப்பினராக தமிழ் கனடியரான ரவிச்சா இரவீந்திரன் பதவியேற்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற Toronto மாநகராட்சித் தேர்தலில், Toronto மாவட்டக் கல்வி சபையின் 11-ஆம் வட்டாரத்தில் (Ward 11) அவர் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் 11,770 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ரவிச்சா இரவீந்திரன், புதன்கிழமை (18) கல்விச் சபை உறுப்பினராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.
Toronto-வில் அமைந்துள்ள மாவட்ட கல்விச் சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், தனது நான்கு ஆண்டுகால புதிய பதவிக்கான சத்திய பிரமாணத்தை திருக்குறள் மீது ஏற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுடன் இந்தச் சிறப்பு தருணத்தை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Scarborough மத்திய தொகுதி (Scarborough Centre – Ward 21), Scarborough வடக்குத் தொகுதி (Scarborough North – Ward 23) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கல்விச் சபை வட்டாரம் 11 (Ward 11) சார்பாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றம், புதிய கல்வி வாய்ப்புகள், பெற்றோர்களின் பங்களிப்பு, உள்ளூர் பாடசாலை சமூகத்தின் தேவைகளை முன்னிறுத்தி Scaborough மக்களுக்குப் புதிய கல்வி சார் பிரதிநிதியாக அவர் செயற்படவுள்ளார்.
Scarborough-வின் பல்லின சமூகங்களின் கல்வி சார் எதிர்பார்ப்புகளைக் கல்வி சபையில் எதிரொலிக்கும் முக்கியப் பிரதிநிதியாக ரவிச்சா இரவீந்திரனின் இந்தப் பதவியேற்பு நோக்கப்படுகிறது.
இம்முறை Toronto மாவட்டக் கல்வி சபை உறுப்பினராக தெரிவான இரண்டு தமிழர்களில் ஒருவராக இவர் அமைக்கிறார்.
நடைபெற்ற தேர்தலில் Toronto மாவட்டக் கல்வி சபையின் 12-ஆம் வட்டாரத்திற்கான (Scarborough–Guildwood–Rouge Park) கல்விச் சபை உறுப்பினராக அனு ஸ்ரீஸ்கந்தராஜா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
