அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு Donald Trump பதவிக்காலம் முடியும் வரை காத்திருப்பது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிர்வாகத்தின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகள் முடியும் வரை காத்திருந்து பொருளாதார வலியைச் சந்திப்பதை விட, வெள்ளை மாளிகையுடன் கூடிய விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்பை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கனடாவின் உயர்மட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் இரகசியக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
கனடா-அமெரிக்கப் பொருளாதார உறவுகளுக்கான மத்திய அரசின் ஆலோசனை குழு கூட்டத்தில் இந்த முக்கிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (19) தெரியவந்துள்ளது.
கனடா-அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் Dominic LeBlanc, தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் Janice Charette, அமெரிக்காவுக்கான கனடியத் தூதுவர் Mark Wiseman, Council Clerk எழுத்தர் Michael Sabia ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்று விளக்கமளித்தனர்.
இதில் Donald Trump பதவி காலம் முடியும் வரை காத்திருப்பதே சிறந்த உத்தி என்ற கருத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.
வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடிய வணிகங்கள், தொழில்துறைகளுக்கு கால அவகாசம் முடிவில்லாமல் இல்லை எனவும் சில துறைகளுக்கு நேரம் வேகமாக குறைந்து வருகிறது எனவும் பிரதமர் Mark Carney-யின் நெருங்கிய ஆலோசகர்கள் சுட்டிக்காட்டினர்.
அதேநேரம், “ஒப்பந்தத்திற்காக எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை அமெரிக்கர்கள் நன்கு அறிவார்கள்” எனவும், கனடாவின் நலன்களை விட்டுக்கொடுக்காமல் ஒரு “இடைக்கால ஒப்பந்தத்தை” எட்டுவதற்கான பணிகள் தொடர்வதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் Donald Trump-ற்குப் பின்னடைவு ஏற்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் ஆலோசனைக் குழு கூட்டம் இதுவாகும்.
இக்கூட்டத்தில் பேசிய தலைமை பேச்சுவார்த்தையாளர் Janice Charette, வரிகளை மேலும் உயர்த்தவும், அவற்றின் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் ஜனாதிபதியிடம் இன்னும் பல அதிகாரங்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி, வரவிருக்கும் நாட்களில் மேலும் பல கொந்தளிப்புகளுக்கு தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, புதன்கிழமை (18) சீனாவில் நடைபெற்ற APEC உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதியை பிரதமர் Mark Carney சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா தயாராக இருப்பதாக இந்த சந்திப்பின் பின்னர் தெரிவித்த Mark Carney, ஆனால் “நாங்கள் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை” எனவும் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
