அமெரிக்க ஜனாதிபதியின் நோக்கங்கள் தெளிவாக ஆரம்பித்தவுடன் ஈரான் யுத்தம் குறித்த கனடாவின் ஆரம்ப நிலைப்பாடு மாறியது என கனடிய பிரதமர் தெரிவித்தார்
ஈரானில் அமெரிக்கா முன்னெடுக்கும் யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் கனடாவின் ஆரம்ப நிலைப்பாடு, அமெரிக்க ஜனாதிபதியின் நோக்கங்கள் மேலும் தெளிவாகத் தெரிய வந்ததால், அடுத்தடுத்த நாட்களில் மாறியது என பிரதமர் Mark Carney கூறினார்.
Canadian Press ஊடகத்திற்கு வெள்ளிக்கிழமை (01) வழங்கிய செவ்வியில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.
இந்த யுத்தத்தின் “நோக்கங்களின் அளவு அல்லது அவை குறித்த தெளிவு” ஆரம்பத்தில் இருக்கவில்லை என கூறிய Mark Carney அவை காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என வாதிடலாம் எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
ஈரான் மீதான அமெரிக்க யுத்தம் ஆரம்பித்த நாளான February 28 அன்று, Mark carney அந்த நடவடிக்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளிப்படுத்தினார்.
சில நாட்களுக்குப் பின்னர், சர்வதேச சட்டத்தை மீறக்கூடும் என குறிப்பிட்ட ஒரு மோதல் குறித்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசிக்காதது குறித்து Mark Carney வருத்தம் தெரிவித்தார்.
இந்த மாற்றம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பரவலான விமர்சனங்களைத் தூண்டியது.
Mark Carney ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்துவிட்டார் என ஈரானின் சில எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.
அதேவேளையில், வல்லரசுகளின் மேலாதிக்கப் போக்கை நிராகரிப்பது குறித்து Davos உலக பொருளாதார மன்றில் ஆற்றிய தனது உரைக்கு Mark Carney முரண்படுவதாக சர்வதேச சட்ட ஆதரவாளர்கள் சிலர் கூறினர்.
ஆனாலும் இந்த யுத்தம் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே கனடாவின் முதலாவது கருத்து வெளிவந்தது என Mark Carney தனது அண்மைய செவ்வியில் குறிப்பிட்டார்.
ஈரான் “உலகிலேயே அரச ஆதரவு பயங்கரவாதத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு” என்ற கருத்தை கனடா நீண்ட காலமாக கொண்டுள்ளது என்பதை பிரதமர் நினைவு படுத்தினார்.
ஈரான் நூற்றுக்கணக்கான கனடியர்களை கொன்றிருக்கிறது எனவும், ஈரானிய ஆட்சி ஏற்கனவே உலகம் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அது அணு ஆயுதங்களை பெற அனுமதிக்கப்படக்கூடாது எனவும் Mark Carney மேலும் கூறினார்.
கனடா இதுவரை இந்த மோதலில் இருந்து விலகியிருந்தாலும், ஒரு முறையான யுத்த நிறுத்தம் ஏற்பட்டால், Hormuz நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க கனடா தனது ஆதரவை அனுப்பக்கூடும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
யுத்தத்தை நிறுத்தி விட்டதாக அமெரிக்கா கூறிவந்த போதிலும், அது ஒரு “நீடித்த” போர் நிறுத்தம் இல்லை என Mark Carney கூறினார்.
இந்த வார இறுதியில் நடைபெறும் ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாட்டிற்காக கனடிய பிரதமர் ஆர்மீனியா பயணமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
