விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கனடா வழிகாட்ட வேண்டும் என கனடாவின் பிரதான எதிர்க்கட்சியிடம் கோரப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்தக் கோரிக்கை முன் வைத்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து, உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளும் தங்கள் தடைகளை நீக்குவதற்கு ஒரு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ வேண்டும் என சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.
கனடிய தலைநகரில் பிரதான எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிவஞானம் சிறீதரன் செவ்வாய்க்கிழமை (27) சந்தித்தார்.
கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre-வின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் Calgary Heritage தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Shuvaloy Majumdar, Aurora-Oak Ridges-Richmond Hill தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Costas Menegakis, நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis அலுவலகத்தின் வெளி தொடர்பு பிரிவின் இணை இயக்குநர் Daryna Ostrovska ஆகியோர் Conservative கட்சியின் சார்பில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தவிர செம்மணி மனித புதைகுழி விசாரணைக்கு சர்வதேச தடயவியல் உதவியும் கோரப்பட்டது.
இந்த விடயங்கள் குறித்து கட்சியின் உயர் மட்டத்தில் ஆலோசித்து சாதகமான முடிவுகளை எடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை (23) கனடிய வெளிவிவகார திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிவஞானம் சிறீதரன் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
