அமெரிக்க இடைத்தேர்தலில் Donald Trump தோல்வி அடைந்தால் அதற்கு கனடா தான் காரணம் எனப் பழி சுமத்தப்படும் என கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் Ottawa-வில் நடைபெற்ற மிக இரகசியமான, மூடிய அறை கூட்டத்தில் தூதுவர் Pete Hoekstra இக்கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி Donald Trump தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதற்கு முழுமுதற் காரணம் கனடா தான் என பகிரங்கமாக பழி சுமத்த வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
கனடா-அமெரிக்க வர்த்தகப் போரில் ஒரு புதிய திருப்பமாக இந்தக் கருத்து வெளியானது.
கனடியத் தொழில்துறை அமைச்சர் Mélanie Joly உள்ளிட்ட கனடிய அமைச்சர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து, அமெரிக்க மாநிலங்களை இலக்கு வைத்துப் பேசிய பேச்சுக்களை ஏற்கனவே அமெரிக்கத் தூதரகம் “தேர்தல் தலையீடு” என பட்டியலிட்டு ஆவணப்படுத்தியுள்ள நிலையில் இந்த புதிய கருத்து வெளியானது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே எஞ்சியுள்ள சூழலில், எல்லையோர அமெரிக்க மாநிலங்களில் நிலவி வரும் கனடிய வர்த்தகப் போர் ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியை பெரிதும் பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எல்லையோரப் பகுதிகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தோற்று, பெரும்பான்மையை Donald Trump இழந்தால், “கனடிய அரசியல்வாதிகளின் எல்லைப் பிரச்சாரங்களும், கனடிய அரசாங்கத்தின் பிடிவாதமுமே இந்தத் தோல்விக்குக் காரணம்” என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக பழி சுமத்த திட்டமிட்டுள்ளதாக Pete Hoekstra கூறினார்.
இந்த இரகசியக் கூட்டத்தின் விபரங்கள் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த தூதுவர் Pete Hoekstra அதற்கு முற்றிலும் முரணான ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “அமெரிக்கா – கனடா இடையே சில வர்த்தக முரண்பாடுகள் இருந்தாலும், நாங்கள் ஒரு பெரிய வர்த்தகப் போரில் ஈடுபடவில்லை” என்று கூறி நிலைமையைத் தணிக்க முயன்றார்.
இருப்பினும், திரைமறைவில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே தீவிரமான அவசரத் தொலைபேசி ஆலோசனைகளும் விவாதங்களும் தொடர்ந்து நீடித்து வருவதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா எங்களின் நிலைப்பாட்டை நோக்கி இறங்கி வருகிறது என்று அண்மையில் கனடிய பிரதமர் Mark Carney நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
