Toronto நகரசபைத் தேர்தலில் நூற்றுக்கணக்கான தேர்தல் விளம்பரப் பலகைகளை திருடி சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
Etobicoke பகுதியில் நூற்றுக்கணக்கான தேர்தல் விளம்பரப் பலகைகளை சட்டவிரோதமாக அகற்றி, சேதப்படுத்தியதாக 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Toronto காவல்துறையினர் வியாழக்கிழமை (15) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தக் கைது குறித்த விபரங்கள் வெளியாகின.
இந்தச் சட்டவிரோதச் சம்பவங்கள் October 1 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
இந்தக் காலகட்டத்தில் பல நூறு விளம்பரப் பலகைகள் காணாமல் போயுள்ளதாக புகார்கள் பதிவாகின.
Etobicoke நகரில் Islington Avenue and Lake Shore Boulevard West ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது
சந்தேக நபர் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரப் பலகைகளை பிடுங்கி, சேதப்படுத்தி, பின்னர் அவற்றை அங்கிருந்த பெரிய குப்பைத் தொட்டியில் வீசியதை அங்கிருந்தவர்கள் கவனித்துள்ளனர்.
அவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சந்தேக நபர் புதன்கிழமை (14) Toronto காவல்துறையின் 22-வது பிரிவு காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார்.
இதில் கைதானவர் Toronto நகரைச் சேர்ந்த 35 வயதான Eric Sullivan என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மீது பொருட்களை திருடுதல், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
