Alberta மாகாணத்தை கனடாவுடன் தொடர்ந்து தக்க வைப்பது குறித்து ஆளும் Liberal கட்சித் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
Alberta மாகாணத்தை கனடாவுடன் தொடர்ந்து ஒருமைப்பாட்டுடன் வைத்திருப்பதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து, Mark Carney தலைமையில் ஆளும் Liberal அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
“கனடா என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைவருக்குமானது” என்ற முழக்கத்துடன் இந்த முக்கியக் கலந்தாலோசனை அரங்கேறியுள்ளது.
Banff நகரில் நடைபெற்ற Liberal அமைச்சரவை உச்சி மாநாட்டில் இந்த விடயம் கவனம் பெற்றது.
Alberta மாகாணம் கனடாவுக்குள்ளேயே நீடிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யும் குழுவினரை பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை (11) சந்தித்துப் பேசினார்.
Forever Canadian குழுவினரை சந்தித்த பிரதமர் அவர்களுக்கு நேரில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கனடிய தேசியக் கொடியின் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பதாகைகளை ஏந்தி பிரதமரை வரவேற்றதுடன், ‘O Canada’ தேசிய கீதத்தையும் பாடினர்.
அங்கு Alberta பிரிவினை எதிர்ப்பு பிரச்சார வாகனத்தில் பிரதமர் கையெழுத்திட்டார்.
இந்த விடயத்தில் பிரதமரின் அணுகுமுறை Alberta மக்களுக்கு அமைதியையும் நம்பிக்கையையும் அளிப்பதாக Forever Canadian நிறுவனரும் Alberta மாகாணத்தின் முன்னாள் துணை முதல்வருமான Thomas Lukaszuk தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சாரக் களத்தில் பிரதமர் வரும் நாட்களில் இன்னும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சியினரும் இந்த ஒருமைப்பாட்டுப் பிரச்சாரத்தில் தங்களை முழுமையாக இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவிலிருந்து Alberta பிரிந்து செல்வது குறித்து இரண்டாவது கட்ட வாக்கெடுப்பை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்த முக்கியப் பொது வாக்கெடுப்பு October 19 அன்று நடைபெறவுள்ளது.
