அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு மாகாண முதல்வர்களை பிரதமர் Mark Carney கேட்டுக் கொண்டுள்ளார்.
கனடிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயலும் நிலையில், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு மாகாண முதல்வர்களை Mark Carney கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் காணொளி வாயிலாக மாகாண முதல்வர்களை புதன்கிழமை (19) மாலை சந்தித்தார்.
இந்தச சந்திப்பு “ஆக்கபூர்வமான, மிக முக்கியமான ஒரு கலந்துரையாடல்” என கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.
இந்த சந்திப்பில் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு வைக்குமாறு மாகாணத் தலைவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டதாக Nova Scotia மாகாண முதல்வர் Tim Houston தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கை “நேரடியாக பேச்சுவார்த்தை மேசையில் இருந்து வந்த ஒன்று” என Tim Houston கூறினார்.
முன்னதாக பிரதமர் தனது அமைச்சரவையை சந்தித்து இருதரப்பு இணக்கம் குறித்து விளக்கினார்.
கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமருடன் நடத்தப்பட்ட விளக்கக் கூட்டத்தை தொடர்ந்து, பல்வேறு மாகாணத் தரப்பினர் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், அந்த ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த தற்காலிக சுங்கவரி ஒப்பந்தம் தனது மாகாணத்திற்கு உகந்ததா என்பதைத் தீர்மானிக்க தன்னிடம் போதுமான தகவல்கள் இல்லை என Quebec மாகாண முதல்வர் Christine Fréchette கூறுகிறார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும், அதேபோல அந்த மாகாணத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும் என Saskatchewan மாகாண முதல்வர் Scott Moe செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்தவுடன், அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு வைக்கத் தயாராக இருப்பதாக Northwest Territories முதல்வர் R.J. Simpson தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் “ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன” என செவ்வாய்க்கிழமை Donald Trump கூறினார்.
ஆனால் இந்தக் கூற்று துல்லியமானதல்ல எனவும் மேலதிக பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க மதுபானங்களை மீண்டும் கடைகளின் விற்பனைக்கு வைக்குமாறு மாகாண முதல்வர்களிடம் பிரதமர் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாக மாகாணத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து வரும் எந்த ஒரு எதிர்ப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
