Ontario Liberal கட்சியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் Navdeep Bains வெற்றி பெற்றார்.
Ontario Liberal கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் Navdeep Bains வெற்றி பெற்று கட்சியின் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
50.3 சதவீத வாக்குகளுடன் நூலிழையில் வெற்றி பெற்று Ontario Liberal கட்சியின் புதிய தலைவராக Navdeep Bains அறிவிக்கப்பட்டார்.
Ontario Liberal கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக சனிக்கிழமை (21) நடைபெற்ற வாக்கெடுப்பில், முன்னாள் மத்திய நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Navdeep Bains 50.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஐந்து போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்தத் தலைமைத் தேர்வுப் போட்டியில், Eric Lombardi பாதியிலேயே விலகிக்கொண்டதால் நான்கு பேர் மட்டுமே இறுதிப் போட்டியில் களமிறங்கினர்.
இதில் முதல் சுற்று வாக்கெடுப்பில், Dylan Marando 9.3 சதவீத வாக்குகளைப் பெற்று கடைசி இடத்தைப் பிடித்ததால் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், மாகாண சட்டமன்ற உறுப்பினர் Stephanie Bowman 15.7 சதவீத வாக்குகளைப் பெற்று கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு Navdeep Bains, Lee Fairclough ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்தது.
இந்த மூன்றாவதும் இறுதிச் சுற்று வாக்கெடுப்பில் Navdeep Bains 50.3 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மருத்துவமனை நிர்வாகியுமான Lee Fairclough 49.7 சதவீத வாக்குகளைப் பெற்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
தனது வெற்றியின் பின்னர் 1,000-க்கும் மேற்பட்ட Liberal கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய Navdeep Bains கட்சியை ஒன்றுபடுத்தி, அடுத்த மாகாணத் தேர்தலை வெற்றி பெறுவது தனது உடனடி இலக்கு என கூறினார்.
தலைமைத் தேர்வுப் போட்டி முடிவடைந்தாலும் Doug Ford தலைமையிலான ஆளும் Progressive Conservative (PC) கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான பிரச்சாரத்தின் ஆரம்பம் இதுவென அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் Kathleen Wynne பதவி விலகிய பின்னர் Ontario Liberal கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது தலைவர் Navdeep Bains ஆவார்.
2018-ம் ஆண்டுத் தேர்தலில் Ontario Liberal கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து முன்னாள் முதல்வர் Kathleen Wynne பதவி விலகினார்.
பின்னர் 2020-ஆம் ஆண்டில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Steven Del Duca, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏமாற்றமளிக்கும் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் இந்த ஆண்டின் ஆரம்பம் வரை தலைவராக பணியாற்றிய Bonnie Crombie, வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெற்ற தலைமைத்துவ வாக்கெடுப்பில் குறைந்த ஆதரவு கிடைத்ததால் பதவியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் புதிதாக Ontario Liberal கட்சியை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள Navdeep Bains, முன்னதாகக் கனடிய மத்திய அரசில் புத்தாக்கம், அறிவியல், தொழில்துறை துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார்.
Ontario மாகாண அரசியலில் PC கட்சிக்கு எதிராக Liberal கட்சியை வலுப்படுத்தி, மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் முக்கியப் பொறுப்பு தற்போது Navdeep Bains வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலை நோக்கிய பயணத்தில் Navdeep Bains பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அவற்றில் முதன்மையானது, அவருக்குத் தற்போது மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினர் பதவி இல்லாததாகும்.
இவருக்கு முன்னர் தலைவர்களாக இருந்த இருவருக்கும் சட்டமன்ற இருக்கை இல்லாத நிலையில், சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ள ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கட்சியின் சில உறுப்பினர்கள் இந்தத் தேர்தலின் போது வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் சட்டமன்ற இருக்கைக்குப் போட்டியிட தாம் விரும்புவதாகவும் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், எப்போது, எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
