Brampton நகரில் உள்ள தனது வாகன assembly ஆலையை விற்பனை செய்யும் முடிவை Stellantis நிறுவனம் தொடர்ந்தால், அந்நிறுவனம் கனடிய மத்திய அரசுக்குச் சுமார் $831 மில்லியன் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பெயர் வெளியிடப்படாத மூத்த மத்திய அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
Stellantis அதிகாரிகளை Ontario மாகாண முதல்வர் Doug Ford, மத்திய தொழில்துறை அமைச்சர் Mélanie Joly, Unifor தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை (20) சந்தித்ததை தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
Stellantis நிறுவனம் மத்திய அரசுக்குச் சுமார் $873 மில்லியன் கடன்பட்டுள்ளதாக கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய Ontario முதல்வர் Doug Ford கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ஆலை விற்பனை நடந்தால் $831 மில்லியன் வசூலிக்கப்படும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளதை மூத்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.
கவச வாகன தயாரிப்பு நிறுவனமான Roshel-க்கு ஆலையை விற்பனை செய்வதாக அறிவித்த பின்னர், $24 மில்லியன் மட்டுமே திருப்பித் தருவதாக Stellantis கூறியிருந்தது.
ஆனால், Brampton, Windsor ஆலைகளின் முதலீடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை திரும்பப் பெற வழக்கு தொடர்வோம் என அமைச்சர் Mélanie Joly எச்சரித்துள்ளார்.
Brampton ஆலை மூடப்படுவதையோ அல்லது விற்கப்படுவதையோ நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்பதை இந்தச் சந்திப்பில் தெளிவாக எடுத்துரைத்து உள்ளதாக கூறிய Doug Ford, ஆலையை தக்கவைக்க தொடர்ந்து போராடுவோம் என பின்னர் செய்தியாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.
