தேசியம்
செய்திகள்

பாரபட்சமான வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக கனடா மீது மேலதிக வரி விதிக்கும் அமெரிக்கா?

பல மாதங்களாக தொடரும் வர்த்தகச் சிக்கலை தீர்ப்பதற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கனடிய பிரதமர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கனடா மீது 50 சதவீத புதிய வரிகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மிரட்டியுள்ளார்.

கனடாவுக்கு எதிரான தனது வர்த்தக போரை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீது 50 சதவீத வரி விதிக்கும் மூன்று அறிவிப்பாணைகளில் Donald Trump திங்கட்கிழமை (20) கையெழுத்திட்டார்.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு எதிராக கனடா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஈடுசெய்ய இந்த வரிகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer கூறினார்.

இந்த நிலையில் பல மாதங்களாக தொடரும்  வர்த்தகச் சிக்கலைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்து கனடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவதானமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Mark Carney, CUSMA சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நேரடியாக மீறும் அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வர்த்தக நடவடிக்கைகளின் வரிசையில் இதுவே மிகச் சமீபத்தியதாகும் என கூறினார்.

கனடாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக கனடா ஒன்றுபட்ட நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தனது பொருளாதாரத்தையும் குடிமக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் Mark Carney தனது அறிக்கையில் கூறினார்.

அமெரிக்காவின் புதிய வரிகள் 30 நாட்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளதால் அரசியல்வாதிகளும் தொழில் துறைத் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த வரிகள், “கனடியத் தொழிலாளர்கள், வணிகங்கள் மீதான ஏற்றுக்கொள்ள முடியாத, நியாயமற்ற மற்றொரு தாக்குதலாகும்” என Conservative கட்சி தெரிவித்தது.

அமெரிக்காவுடனான உறவு முறிவால் கனடா ஒரு “பெரும் நெருக்கடியில்” சிக்கியுள்ளது என Conservative கடசியின் அறிக்கை குறிப்பிடுகிறது.

கனடியர்களுக்கு உறுதியளித்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்குச் செயல்படாமல், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவின் பேரம் பேசும் வலிமையை விட்டுக் கொடுத்தது பிரதமரின் தவறான செயல் எனவும் அந்த அறிக்கை விமர்சிக்கிறது.

இந்த வரி அறிவித்தல் மூலம் யதார்த்தத்துடனான தொடர்பை Donald Trump இழந்துவிட்டார் என NDP தலைவர் Avi Lewis சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த வரிகள் அமுல்படுத்தப்பட்டால் எதிர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு ஆதரவு திட்டங்களைத் தயாரிக்கவும் Liberal அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.

“பகுத்தறிவற்ற, தீங்கு விளைவிக்கும் ஆக்கிரமிப்பு” இது என Donald Trump நிர்வாகத்தின் வரிகளை Bloc Québécois  தலைவர் Yves-François Blanchet கண்டித்துள்ளார்.

கனடாவைப் பாதுகாப்பதில் பிரதமர் தவறி வருவதை அது காட்டுகிறது எனவும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் இந்த புதிய வரி அச்சுறுத்தல்களை “நியாயமற்றவை, கவலைக்குரியவை” என Quebec முதல்வர் Christine Fréchette குறிப்பிட்டார்.

இந்த வரி நடவடிக்கைக்கு கனடா பதிலடி வழங்க வேண்டும் என Ontario முதல்வர் Doug Ford கூறினார்.

இந்த வரிகள் பெரும்பாலும் அமெரிக்க குடிமக்களுக்கான செலவுகளைத்தான் அதிகரிக்கும் என கூறிய British Colombia மாகாண முதல்வர் David Eby, தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த திடீரென அறிவித்தல் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து மூன்று தினங்கள் தொடரும் மாகாண முதல்வர்களின் கூட்டத்தின் கவனத்தை மாற்றியமைக்கிறது.

Related posts

எரிபொருள் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

Ontario பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளுக்கு முழுமையான தடை சாத்தியம்?

Lankathas Pathmanathan

கனேடிய தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகின!

Gaya Raja

Leave a Comment