தேசியம்
செய்திகள்

நிறைவேற்றப்படுமா மத்திய வரவு செலவுத் திட்டம்? 

வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம், சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக அமையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரதமர் Mark Carney, நிதி அமைச்சர் François-Philippe Champagne ஆகியோர் செவ்வாய்க்கிழமை (04) தமது முதலாவது வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றனர்.

பிரதமரும் அவரது நிதியமைச்சரும் இந்த வரவு செலவுத் திட்டத்தை ஒரு தலைமுறைக்கான வரவு செலவுத் திட்டமாக மீண்டும் மீண்டும் வகைப்படுத்தியுள்ளனர்.

சிதைந்து வரும் உலக பொருளாதாரம், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை கொண்ட இந்த காலகட்டத்தில், கனடா அதிக முதலீடு செய்து, குறைவாக செலவிட வேண்டும் எனவும் இவர்கள் இருவரும் தெரிவித்து வருகின்றனர்

கடினமான தேர்வுகள், தியாகங்கள் குறித்தும் இருவரும் தொடர்ந்து குறிப்பிடுகின்றனர்.

ஆனாலும் பல வாரங்களாக தொடர்ந்த மத்திய அரசின் செலவீன அறிவிப்புகளுக்குப் பின்னர் இந்த வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை குறித்த கேள்வி உள்ளது.

இதற்கிடையில், பிரதமராக Mark Carney-யின் முதல் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

தனது வரவு செலவுத் திட்டம் குறித்து தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் Mark Carney சனிக்கிழமை (01) சமிச்சை காட்டினார்.

இந்த நேரத்தில் நாட்டுக்கு சரியான வரவு செலவுத் திட்டம் இது என்ற 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை தனது கட்சி எதிர்த்து வாக்களிக்குமா என்பதை Conservative தலைவர் Pierre Poilievre கூற மறுத்து வருகிறார்.

ஆனால் நிதியமைச்சருக்கும், Bloc Québécois தலைவர் Yves François Blanchet-க்கும் இடையிலான அண்மைய பேச்சுவார்த்தைகள், அவரது கட்சி இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காமல் போகும் நிலையை ஏற்படுத்தலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சிறுபான்மை Liberal அரசாங்கம், இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற மூன்று வாக்குகள் குறைவான நிலை உள்ளது.

இதனால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலை தோன்றியுள்ளது.

நாடாளுமன்றத்தில் Liberal அரசாங்கம் 169 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.

ஏனைய கட்சிகள் 174 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.

Conservative 144, Bloc Québécois 22, NDP 7, பசுமைக் கட்சி ஒன்று என ஆசன பகிர்வு அமைகிறது.

இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற, Liberal அரசாங்கம்  எதிர்க்கட்சிகள் ஒன்றின் ஆதரவைப் பெற வேண்டும்.

அல்லது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

NDP இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தாலோ அல்லது வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தாலோ Liberal அரசாங்கம் இதில் வெற்றி பெறலாம்.

ஆனாலும் இதில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட  ஆவணத்தைப் படிக்க வேண்டும் என இடைக்கால NDP தலைவர்  Don Davies வெள்ளிக்கிழமை (31) கூறினார்.

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாக அமைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்?

Lankathas Pathmanathan

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

வட்டி விகிதங்கள் குறித்த மாறுபட்ட எதிர்பார்ப்புகளுடன் கனடாவின் மிகப்பெரிய வங்கிகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment