தேசியம்
செய்திகள்

மீண்டும் ஒரு தேர்தலுக்கான சாத்தியக்கூறு?

கனடியர்கள் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள நேரிடும் சாத்தியக்கூறு குறித்து Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

November மாதம் 4-ஆம் திகதி Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வி அடைந்தால், அது ஒரு பொதுத் தேர்தலை தூண்டக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

சிறுபான்மை Liberal அரசாங்கம், இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற மூன்று வாக்குகள் குறைவான நிலை உள்ளது.

இதனால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற Liberal அரசுக்கு ஏனைய கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலை தோன்றியுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாக அமைவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமது வரவு செலவுத் திட்டம்  நிறைவேற்றப்படுமா என்பது குறித்து அரசாங்க அவைத் தலைவர் Steve MacKinnon சந்தேகம் எழுப்பினார்.

Bloc Québécois கட்சி இந்த வரவு செலவுத் திட்டத்தை பார்க்காமலே, அதை ஆதரிப்பதற்கான சாத்தியக் கூறுகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை Conservative கட்சி வரவு செலவுத் திட்டம் தொடர்பாக வெறும் அபத்தமான கோரிக்கைகளை முன் வைப்பதாகவும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கனடியர்களின் மனநிலையை தவறாகப் புரிந்து கொள்வதாகவும் Steve MacKinnon கூறினார்.

இன்றைய நிலையில் ஒரு தேர்தல் அவசியம் என Liberal அரசாங்கம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு சிறுபான்மை நாடாளுமன்றமாக இருந்தாலும், எங்களுக்கு ஒரு ஆணை இருப்பதாக நம்புகிறோம் என Steve MacKinnon   தெரிவித்தார்.

இந்த நிலையில் விரைவில் மற்றொரு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு சபையின் தேவையான ஆதரவு கிடைக்கும் என Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இது அரசியல் தோரணைக்கான நேரம் அல்ல என நிதியமைச்சர் François-Philippe Champagne தெரிவித்தார்.

வரலாற்றில் இந்த தருணத்தின் முக்கியத்துவத்தை கனடியர்கள் புரிந்து கொள்கிறார்கள் எனவும் அவர்  கூறினார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்புக்களை செய்யத் தயாரா என கேள்வி எழுப்பிய போது, அரசியல்வாதிகள் சொல்வதை அல்லாமல்  கனடியர்களின் பேச்சை தான் செவிமடுக்க தயாராக உள்ளதாக கூறினார்.

வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்படுவது கனடியர்களின் நலனுக்கானது என்பதை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அதை ஆதரிப்பார்கள் எனவும் ஆளுங்கட்சி கொறடா Mark Gerretson கூறினார்.

தமது வரவு செலவுத் திட்டம் வலுவானதாக இருக்கும் என நம்புவதாக கூறிய James Maloney, வரவு செலவுத் திட்டம் சபையில் நிறைவேறும் எனவும்  நம்புவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான வர்த்தகம் உட்பட கனடா சர்வதேச ரீதியில் எதிர்கொள்ளும் சவால்கள் மத்தியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி எல்லைகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Corey Hogan வலியுறுத்தினார்.

Related posts

தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக விரையமாகும் பால்

Patrick Brown முன்னெடுத்த $1,700 நிதி சேர் நிகழ்வு

Lankathas Pathmanathan

முறையான குடியேற்ற நடைமுறை அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment