September 30, 2026
தேசியம்
செய்திகள்

நல்லிணக்க பணிகள் இன்னும் நிறைவடையவில்லை: உண்மை மற்றும் நல்லிணக்க நாள் நிகழ்வில் பிரதமர்!

கனடாவின் வரலாற்றில் முதற்குடியினர் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான நல்லிணக்க பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.

கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆறாவது தேசிய நாளை முன்னிட்டு Alberta மாகாணம் Edmonton நகரில் நடைபெற்ற சிறப்பு நினைவு நிகழ்வில் Mark Carney புதன்கிழமை (30) பங்கேற்றார்.

முதற்குடியினர் உரிமைகள், நல்லிணக்க கொள்கைகளுக்கு தனது அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்வில் பிரதமரின் உரை அமைந்தது.

குடியிருப்புப் பாடசாலை முறைகளால் முதற்குடியினர் சமூகங்கள், குழந்தைகள், அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட்ட ஆழமான வடுக்களுக்கும், ஆறாத துயரங்களுக்கும் மத்திய அரசாங்கம் முழு பொறுப்பேற்கிறது என பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.

வெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை மட்டும் நடத்துவது தங்களது கடமையாகாது எனக் குறிப்பிட்ட அவர், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்தி, முதற்குடியினர் மக்களின் பொருளாதார, சமூக உரிமைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் தனது அரசு உறுதியாகச் செயல்படும் எனவும் கூறினார்.

இந்த நாளை குறிக்கும் வகையில் ஆங்கிலம், பிரெஞ்சு தவிர Algonquin, Denesuline, Innu-Aimun, Inuktitut (Northern Baffin), Mi’kmaq, Michif, Oji-Cree, Plains Cree, Western Ojibway என 9 வெவ்வேறு முதற்குடியினர் மொழிகளில் பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாள் புதனன்று நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

கனடா முழுவதிலும் உள்ள முக்கியப் பொது இடங்களில் ‘ஒவ்வொரு குழந்தையும் முக்கியம்’ (Every Child Matters) என்ற வாசகம் அடங்கிய ஆரஞ்சு நிறக் கொடிகள் ஏற்றப்பட்டு, சிறப்பு நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

Edmonton, Ottawa, Toronto, Vancouver, Calgary, Iqaluit உள்ளிட்ட பகுதிகளில் பிரத்தியேக நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் முதற்குடியினர் குழந்தைகளை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் விதமாக, சிறிய குழந்தைகள் காலணிகளை அடுக்கி தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்த நிகழ்வுகளில் பல்வேறு அரச பிரதிநிதிகள் பங்கேற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Pearson விமான நிலையத்தில் 20 மில்லியன் டொலர் கொள்ளை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை: Statement by Gary Anandasangaree, Canadian Member of Parliament, on First Anniversary of Easter Sunday Attacks in Sri Lanka:

Lankathas Pathmanathan

ஜப்பானுடன் நெருக்கமான உறவுக்கு பிரதமர் உறுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment