British Columbia மாகாணத்தில் உள்ள முதற்குடியினர் நிலப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே வாகனம் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் – மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து வாகன ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல அவசர நிலை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து Tsawwassen First Nation முதற்குடியினர் நிலத்தில் அமைந்துள்ள Tsawwassen Mills வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் புதன்கிழமை (30) காலை அரங்கேறியுள்ளது.
இந்த விபத்து நிகழ்ந்த சமயத்தில், அப்பகுதியில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாளை முன்னிட்டு முதற்குடியினர் மக்களின் நினைவேந்தல் பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த முதற்குடியினர் நிர்வாகம், தமது முக்கிய பண்பாட்டு நிகழ்வை உடனடியாக இரத்து செய்து, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்புமாறு அவசர அறிக்கை விடுத்தது.
இந்த விபத்து நிகழ்ந்த பகுதியில் நடைபெற்ற பேரணி நிகழ்வில், கனடாவின் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் Tim Hodgson கலந்து கொண்டதாக சமூக வலைத்தள பதிவு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே இந்தப் பதிவு இணையப் பக்கத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல எனத் தெரிவித்த Delta காவல்துறை, ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடே இதற்குக் காரணம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து நடந்தது முதல் விரைந்து செயல்பட்ட மீட்புப் பணிகளில் உதவிய Delta காவல்துறை, அவசர கால மருத்துவ மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களுக்கு உதவிய உள்ளூர் சமூக மக்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக Tsawwassen First Nation முதற்குடியினர் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
