எதிர்வரும் March வரை அனைத்து புதிய பணியமர்த்தல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக Mississauga மாநகராட்சி அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சொத்து வரி அதிகரிப்பதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சொத்து வரியை உயர்த்த போவதில்லை என நகர முதல்வர் Alvin Tedjo அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு வசந்த காலம் வரை அனைத்து பணியமர்த்தல்களையும் Mississauga மாநகராட்சி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நகரின் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாக இந்தக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதை ‘ஆட்சேர்ப்புத் தடை என அழைப்பதை மறுத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், “நியமனங்கள், பணியிட மாற்றங்கள், ஒப்பந்த நீட்டிப்புகள் உட்பட அனைத்து உள்ளக, வெளிப்புறப் பணியமர்த்தல்களும் குறைந்தபட்சம் March 2027 வரை நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள், பணியிட மாற்றங்கள் அல்லது ஒப்பந்த நீட்டிப்புகளுக்கான எந்தவொரு கோரிக்கையும் சம்பந்தப்பட்ட ஆணையர் அல்லது நகர மேலாளரின் மின்னஞ்சல் ஒப்புதலை பெற்ற பின்னரே செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
2027 வரவு செலவில் ஏற்பட்டுள்ள $1.1 பில்லியன் பற்றாக்குறையைச் சமாளிக்க Toronto மாநகராட்சியும் இந்த மாத ஆரம்பத்தில் இது போன்ற ஆட்சேர்ப்புத் தடையை அறிவித்திருந்தது.
அத்தியாவசிய சேவைகள் இதனால் பாதிக்கப்படாது எனவும், கடந்த ஆண்டும் இத்தகைய நடவடிக்கை மூலம் பல மில்லியன் சேமிக்கப்பட்டதாகவும் Toronto நகர முதல்வர் Olivia Chow குறிப்பிட்டிருந்தார்.
