வருடாந்த Toronto Santa Claus அணிவகுப்பில் ஆயிரக்கணக்கானவர்கள் உற்சாக பங்கேற்றனர்.
நத்தார் பண்டிகை காலத்தை வரவேற்கும் விதமாக Toronto நகரின் பாரம்பரிய நிகழ்வான 122-வது Santa Claus அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை (22) கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கானவர்கள் Bloor, Yonge வீதிகளின் இருபுறமும் திரண்டு உற்சாகமாக பங்கேற்றனர்.
23 அலங்கார ஊர்திகள், இசைக் குழுக்களுடன் Christie Pits பூங்காவிலிருந்து ஆரம்பித்த இந்த அணிவகுப்பு, Toronto காவல்துறையின் குதிரைப் படை முன்னே செல்ல St. Lawrence சந்தை வரை நோக்கி நகர்ந்தது.
இதில் பல்கலைக்கழக இசைக்குழுக்கள், கனடாவின் முதற்குடியினர் நடனக் குழு உட்படப் பல குழுக்கள் பங்கேற்றன.
புதிதாகப் பதவியேற்ற Toronto நகர முதல்வர் Olivia Chow, Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கனடா தபால் துறை ஊழியர்கள் வீதியின் இருபுறமும் நடந்து சென்று, குழந்தைகளிடமிருந்து Santa Claus-சுக்கான கடிதங்களைச் சேகரித்தனர்.
அணிவகுப்பின் இறுதியில்பரிசுப் பொருட்களுடன் வந்த Santa Claus, குழந்தைகளுக்குத் தனது பண்டிகைக் கால வாழ்த்துக்களை தெரிவித்தார்.
