Alberta மாகாண அரசாங்கம் முன்வைக்கும் குடியேற்றம், அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த ஒன்பது கேள்விகளுக்கும் மக்கள் ‘இல்லை’ என வாக்களிக்க வேண்டும் என பிரதமர் Mark Carney பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Alberta மாகாண பொது வாக்கெடுப்பு களம் இறுதிப் பகுதியை எட்டியுள்ள நிலையில் Calgary நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் உரையாற்றினார்.
இந்த பொது வாக்கெடுப்பில் மக்கள் கனடாவிலேயே தொடர வேண்டும் என்ற முதன்மைக் கேள்விக்கு ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாமல், மாகாண அரசு கேட்டுள்ள ஏனைய 9 கேள்விகளையும் நிராகரிக்கக் கோரி No to the Nine என்ற வலுவான பிரச்சாரக் களம் மாகாணத்தில் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் Mark Carney, அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களின் வாக்குச்சீட்டுகளில் ‘ஒன்பது கேள்விகளுக்கும் இல்லை’ என்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாகவும் தனது Thanksgiving செய்தியிலும், பிரிவினைவாத பாதையைத் தவிர்க்குமாறு Alberta வாக்காளர்களை பிரதமர் Mark Carney வலியுறுத்தினார்.
இந்த நிலையில் பிரதமரின் பிரச்சாரத்திற்கு மாறாக Alberta முதல்வரின் பிரச்சாரம் அமைகிறது.
தான் கனடாவிலேயே நீடிப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தனக்கு அரசியல் பலம் தேவைப்படுவதால், ஏனைய 9 கேள்விகளுக்கும் மக்கள் ‘ஆம் என்று வாக்களிக்க வேண்டும் என முதல்வர் Danielle Smith தொடர்ந்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இருப்பினும், Alberta மாகாணத்தைச் சேர்ந்த மூன்று முன்னாள் முதல்வர்கள் அண்மையில் இணைந்து, இந்த பொது வாக்கெடுப்பில் உள்ள குடியேற்றம் சார்ந்த 5 கேள்விகளுக்கும் மக்கள் ‘இல்லை’ என்றே வாக்களிக்க வேண்டும் என விடுத்திருந்த கூட்டறிக்கை Danielle Smith முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது..
October 19 திங்கட்கிழமை இந்த இறுதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கனடாவின் முதன்மை அரசியல் தலைவர்கள் அனைவரும் Alberta மாகாணத்தில் முகாமிட்டுள்ளனர்.
பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (15) மாலை Forever Canadian பேரணியில் பங்கேற்கிறார்.
வெள்ளிக்கிழமையும் (16) அவர் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் தனது வலுவான பிரச்சார செய்தியை வெள்ளியன்று Calgary நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் பதிவு செய்யவுள்ளார்.
