தேசியம்
செய்திகள்

கனடா-இந்தியா புதிய வர்த்தக கூட்டணி: 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வர்த்தகக் குழுவின் மூலம் $300 மில்லியன் ஒப்பந்தங்கள் கையெழுத்து!

கனடா – இந்தியா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தகக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி கனடிய அரசு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கனடிய சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் Maninder Sidhu தலைமையிலான இந்த வர்த்தகக் குழுவின் மூலம், முதற்கட்டமாக $300 மில்லியன் மதிப்புள்ள 30 புதிய வணிகக் கூட்டணிகள் வெற்றிகரமாகக் கையெழுத்தாகியுள்ளன.

புதுடெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய முக்கிய இந்திய நகரங்களில் ஒரு வாரக் கால பயணமாக 300 கனடியப் பிரதிநிதிகள் அடங்கிய Team Canada  குழு தீவிர வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக பேச்சுவார்த்தையில் இருக்கும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை எதிர்வரும் December நடுப்பகுதிக்குள் இறுதி செய்யக் கனடா மிகத் தீவிரமாக நகர்வுகளில் இறங்கியுள்ளது.

இந்தியப் பிரதமர் Narendra Modi எதிர்வரும் December மாதம் கனடாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால், அதற்குள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க Mark Carney அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்குச் சுமார் $30 பில்லியன் இருதரப்பு வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் 2030-ம் ஆண்டிற்குள் இதனை $70 பில்லியனாக உயர்த்த Mark Carney அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.

இரு நாடுகளின் தூதரக அதிகாரிகள் பரஸ்பரம் வெளியேற்றப்பட்டனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கனடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், முன்னாள் பிரதமர் Justin Trudeau அரசு இந்திய அரச முகவர்கள் மீது குற்றம் சாட்டியதால் இந்த நிலை ஏற்பட்டது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நாடுகளும் தங்களின் உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை சார்ந்த சவால்களை தனித்தனியாகக் கையாண்டு, தூதரகப் பதற்றங்களை குறைத்துள்ளன.

அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகப் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா தனது பொருளாதாரச் சுயாட்சியை நிலைநாட்ட முயல்கிறது.

தவிரவும் இந்தியா போன்ற 1.4 பில்லியன் மக்கள் தொகையும் 7% பொருளாதார வளர்ச்சியும் கொண்ட ஒரு மாபெரும் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளவும் கனடா முயல்கிறது.

Related posts

பிரதமரின் குழந்தைகளில் ஒருவருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Haida Gwaii முதற்குடி உரிமைக்கு மத்திய அரசு அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Scarborough வாகன விபத்தில் தமிழ் இளைஞர் சம்பவ இடத்தில் பலி!

Gaya Raja

Leave a Comment