Ontario மாகாணத்தின் வடமேற்குப் பகுதி நிலையான பகலொளி நேரத்திற்கு (Permanent Daylight Time) மாறுகிறது:
Ontario மாகாண அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாகாண முதற்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் Greg Rickford செவ்வாய்கிழமை (13) வெளியிட்டுள்ளார்.
அண்டை மாகாணமான Manitoba மாகாணத்தின் நேரத்தை ஒத்திசைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
எதிர்வரும் November 1-ஆம் திகதியன்று Ontario-வின் நேரச் சட்டத்தில் ஒழுங்கு முறை மாற்றம் கொண்டுவரப்பட்டு, மாகாணத்தின் 90-வது தீர்க்கரேகைக்கு மேற்கே உள்ள மத்திய நேர மண்டலப் பகுதிகள் அனைத்தும் இனி நிரந்தரமாக இந்த நேரத்தைப் பின்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் Manitoba முதல்வர் Wab Kinew தங்கள் மாகாணத்தில் இனி வருடத்தில் இரண்டு முறை கடிகார நேரத்தை மாற்றும் முறை ஒழிக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் நிலையான பகலொளி நேரமே பின்பற்றப்படும் என அறிவித்தார்.
Manitoba-வின் எல்லையை ஒட்டி, மத்திய நேர மண்டலத்தில் உள்ள வடமேற்கு Ontario பகுதி இதனால் பெரும் குழப்பத்திற்கு ஆளானது.
இந்த விடயத்தில் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள நகராட்சிகள், உள்ளூர் வணிக அமைப்புகள், முதற்குடி மக்கள் ஆகியோரிடம் மாகாண அரசு கருத்துக் கோரி கருத்து கணிப்பு நடத்தியது.
அதில் 90 முதல் 94 சதவீத மக்கள் கடிகார மாற்றத்தை ஒழித்து, நிலையான நேரத்திற்கு மாறவே ஒருமித்த ஆதரவை வழங்கியுள்ளனர்.
வடக்கு Ontario-வின் பெரும்பாலான முதற்குடி சமூகப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) மாகாணசபை உறுப்பினர் Sol Mamakwa இந்த முடிவை வரவேற்பதாக கூறியுள்ளார்.
கனடாவின் பல்வேறு மாகாணங்கள் தற்போது இந்த நேர மாற்றும் முறையைக் கைவிட்டு வருகின்றன.
British Colombia மாகாணம் கடந்த March மாதம் நிலையான Pacific பகலொளி நேரத்திற்கு மாறுவதாக அறிவித்தது.
Alberta மாகாணம் இந்த ஆண்டு முதல் நிலையான பகலொளி நேரத்திற்கு (Alberta நேரம்) மாறியதன் மூலம், Saskatchewan மாகாணத்துடன் ஆண்டு முழுவதும் ஒரே நேரத்தைக் கொண்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது Ontario-வின் வடமேற்குப் பகுதியும் இணைந்திருப்பது வடபகுதி மக்களின் அன்றாட வாழ்வையும் வர்த்தகத்தையும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
