Québec மாகாண சட்டமன்றத் தேர்தலில் ஆளும் Coalition Avenir Québec (CAQ) கட்சி சந்தித்த தோல்வியை தொடர்ந்து, கட்சியின் இடைக்காலத் தலைவரான Christine Fréchette தனது பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்.
தேர்தலில் CAQ கட்சி சந்தித்த படுதோல்விக்கு முழுப் பொறுப்பேற்று, Christine Fréchette தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
“தேர்தல் முடிவுகளுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என செவ்வாய் கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறிய Christine Fréchette , “CAQ கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்” என அறிவித்தார்.
எனினும், புதிய முதல்வர் முறைப்படி பதவியேற்கும் வரை, தான் மாகாணத்தின் தற்காலிக முதல்வராக நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
முன்னாள் முதல்வர் François Legault-டின் பதவி விலகலுக்குப் பின்னர், கட்சியை வழிநடத்தி வந்த Christine Fréchette எடுத்துள்ள இந்த திடீர் பதவி விலகல், Québec அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை (05) நடைபெற்ற தேர்தலில் பிரிவினைவாத Parti Québécois (PQ) கட்சி புதிய சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது.
அதே நேரத்தில், Charles Milliard தலைமையிலான Liberal கட்சி (PLQ) 40 ஆசனங்களை வெற்றி பெற்று பலமிக்க அதிகாரப்பூர்வ எதிர்க் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆளும் கட்சியாக 79 ஆசனங்களுடன் தேர்தலை எதிர்கொண்ட Coalition Avenir Québec (CAQ) இந்தத் தேர்தலில் எந்த ஒரு ஆசனத்தையும் வெற்றிபெறத் தவறிய நிலையில் அதன் தலைவர் Christine Fréchette பதவி விலகியுள்ளார்.
Quebec மாகாணத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்து வந்த CAQ கட்சியின் ஆட்சி, இத்தேர்தல் தோல்வியின் மூலம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
CAQ கட்சி எட்டு ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
CAQ கட்சி அதன் நிறுவனரான François Legault தலைமையின்கீழ் 2018 -ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சி அமைத்தது.
இதன் மூலம் Quebec மாகாணத்தில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இரு கட்சி அரசியல் போக்கை உடைத்தெறிந்து, மொழி உரிமைகள், மதச்சார்பின்மைக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து François Legault ஆட்சியை வழிநடத்தினார்.
