தேசியம்
செய்திகள்

Guelph பல்கலைக்கழக Homecoming வன்முறையில் 60 பேர் காயம்!

Guelph பல்கலைக்கழகத்தின் Homecoming (HoCo) வன்முறையில் 60 பேர் வரை காயமடைந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியுள்ள Chancellors Way பகுதியில் கடந்த சனிக்கிழமை (26) நடைபெற்ற அத்துமீறிய HoCo கொண்டாட்டத்தின் போது, 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே இடத்தில் திரண்டதே இந்த  வன்முறைக்கும் முக்கிய காரணியாக குறிப்பிடப்படுகிறது.

இந்த அத்துமீறிய கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளில் சுமார் 60 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவு முடங்கும் நிலைக்கு வழிவகுத்தது.

ஒரே நாளில் சுமார் 60 பேர் காயம் அடைந்து அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவக் கட்டமைப்பும் அவசரகால வளங்களும் முழு கொள்ளளவையும் தாண்டி மிகக் கடுமையான அழுத்தத்தைச் சந்தித்ததாக Guelph பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் Dr. Alex Folkl தெரிவித்தார்.

இதில் தொடர்புடைய வன்முறையாளர்களை கண்டறிய Guelph காவல்துறை 19 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை அடையாளம் காண பொதுமக்கள் அவசர உதவியை நாடியுள்ளது.

முதற்கட்டமாக புதன்கிழமை (30) 6 ஒளிப்படங்களை வெளியிட்டிருந்த காவல்துறையினர் வியாழக்கிழமை (01) மேலும் பல புகைப்படங்களை இணைத்து மொத்தம் 19 நபர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் முன்னதாக தேடப்பட்டவர்கள் 5 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வித மாகாண அல்லது மாநகர அனுமதியுமின்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குறுகிய குடியிருப்பு வீதிக்குள் திரண்டதால், கூட்டத்தை அதிகாரிகளால் உடனடியாக கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றியது.

இதில் வன்முறையாளர்கள் பல்கலைக்கழகத்தை அண்டியுள்ள பகுதியில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடிய உள்ளனர்.

இவர்கள் சில கடைகளில் இருந்து பொருட்களை சட்டவிரோதமாக திருடிச் சென்றுள்ளனர் என காவல்துறையினர் கூறினர்.

இந்த வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு Guelph தொகுதியின் மாகாண சட்டமன்ற உறுப்பினரும், Ontario பசுமை கட்சித் தலைவருமான Mike Schreiner கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை “நீங்களாகவே வந்து சரணடையுங்கள்” என Mike Schreiner வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இதுபோன்ற மோசமான அராஜகங்கள் இனி எப்போதும் அனுமதிக்கப்பட மாட்டாது என Guelph பல்கலைக்கழகத் தலைவர் Rene Van Acker தெரிவித்துள்ளார்.

இக் கொண்டாட்டத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் Guelph பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல என்பதும், Wilfrid Laurier போன்ற அண்டை நகரப் பல்கலைக் கழகங்களில் இருந்து இதற்காகவே பிரத்யேகமாக பல இளைஞர்கள் திரண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

கனடா முழுவதும் எரிபொருளின் விலை குறைந்தது

Lankathas Pathmanathan

Air Canada சேவை நிறுத்தத்தை தவிர்க்க ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Hamilton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Andrea Horwath

Leave a Comment