September 30, 2026
தேசியம்
செய்திகள்

புதிய அத்தியாயத்திற்கான காலம்: பதவி விலகல் குறித்து Scott Aitchison

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Scott Aitchison பதவி விலகும் அறிவித்தலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

கடந்த சில தினங்களாக பேசுபொருளாக இருந்த இந்த பதவி விலகல் அறிவித்தல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது.

Ontario மாகாணத்தின் Parry Sound-Muskoka தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான Scott Aitchison தனது பதவி விலகல் கடிதத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக புதன்கிழமை (30) வெளியிட்டார்.

தற்போதைய இலையுதிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் இந்த பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது புதிய அத்தியாயத்திற்கான காலம்” என தனது பதவி விலகல் கடிதத்தில் 53 வயதான Scott Aitchison குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 30 ஆண்டுகளாக பொது வாழ்வில் நமது சமூகத்திற்கு சேவை செய்ய முடிந்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ஆகும்” என குறிப்பிட்ட Scott Aitchison, “புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கு இதுவே சரியான தருணம்” எனவும் கூறினார்.

இந்தப் பதவி விலகலை உறுதிப்படுத்திய Conservative தலைவர் Pierre Poilievre, தனது தொகுதி மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒருவராக Scott Aitchison-னை பாராட்டியுள்ளார்.

தனது பங்கிற்கு Pierre Poilievre-ருடன் இணைந்து பணியாற்றியது தனக்குக் கிடைத்த பெருமை என பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2019 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முன்னதாக Huntsville நகர முதல்வராகவும் இருந்த Scott Aitchison-னின் இந்த திடீர் பதவி விலகல் Conservative கட்சித் தலைவருக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

கனடாவின் முன்னணி ஆய்வு நிறுவனமான Nanos Research வெளியிட்டுள்ள புதிய கருத்து கணிப்பில் ஆளும் Liberal கட்சி 49.9 சதவீதமான ஆதரவுடன் முதலிடத்தில் இருக்கும் சூழலில், இந்த பதவி விலகல்  அறிவித்தல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக Conservative தலைவர் Pierre Poilievre-ரின் தலைமைத்துவம் குறித்துக் கடுமையான கேள்விகள் எழுந்து வரும் வேளையில், ஒரு ஆண்டிற்குள் கட்சியில் இருந்து விலகும் 8-வது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

இதுவரை Chris d’Entremont, Michael Ma, Matt Jeneroux, Marilyn Gladu ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் Liberal கட்சிக்கு மாறியுள்ளனர்.

தவிரவும்  Richard Martel மேலவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Larry Brock, Cathay Wagantal ஆகியோர் அண்மையில் மத்திய அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளனர்.

இந்தப்  புதிய பதவி விலகல் மற்றொரு இடைத் தேர்தலுக்கு வழிவகுக்கிறது.

பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கம் தொடர்ந்து நடைபெறும் இடைத்  தேர்தல்களில் வெற்றி பெற்று வரும் நிலையில் இந்த புதிய இடைத் தேர்தல் ஆறு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற Conservative கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் Scott Aitchison போட்டியிட்டிருந்தார்.

தற்போதைய கட்சித் தலைவர் Pierre Poilievre கட்சியின் புதிய தலைவராக வெற்றி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் போட்டியில், Scott Aitchison ஐந்தாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Quebecகில் ஒவ்வொருவருக்கும் $500 கொடுப்பனவு

Lankathas Pathmanathan

கனடாவில் 4 மில்லியனை தாண்டியது தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை!

Gaya Raja

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment