கனேடிய மத்திய அரசாங்கம் 101.4 பில்லியன் டொலர்களை புதிய செலவீனங்களாக அறிவித்தது.
திங்கட்கிழமை மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட்டது. துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். கனடாவில் ஒரு பெண் நிதியமைச்சர் சமர்ப்பித்த முதலாவது வரவு செலவுத் திட்டமாக இது அமைந்திருந்தது.
COVID தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதுடன் தொற்றின் பின்னரான பொருளாதார மீட்சியைத் தூண்டுதல் ஆகிய இரண்டையும் நோக்கமாகக் கொண்டு இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறை முடிவடைந்த ஆண்டிற்கு 354.2 பில்லியன் டொலராக இருக்கும் எனவும் 2021-22 நடப்பு நிதியாண்டில் இது 154.7 பில்லியன் டொலராக குறையும் எனவும் நிதியமைச்சர் Freeland அறிவித்தார். COVID உதவித் திட்டத்திக்கான கனடாவின் கடன் 1 ட்ரில்லியன் டொலர்களை கடக்கும் என வரவு செலவு திட்டத்தின் மூலம் தெரியவருகின்றது.