தொழிலாளர்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுத்ததற்காக கனடிய அரசாங்கம் ஒருபோதும் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என கனடா-அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய $1 பில்லியன் இறக்குமதித் தடை அமுலுக்கு வந்த சில மணி நேரங்களில் அமைச்சரின் இந்தக் கருத்து வெளியானது.
New Brunswick மாகாணத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
கனடா தனது வரிகளுக்காக அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரும் என திங்கட்கிழமை, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய Donald Trump கூறியுள்ளார்.
கனடா கடந்த காலங்களில் அமெரிக்காவை மிகவும் மோசமாக நடத்தியுள்ளது எனத் தெரிவித்த அவர், அதற்காக கனடா அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரும் எனவும் கூறியிருந்தார்.
அமெரிக்க அரசு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்திட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்த விதிகளை மீறி, கனடா மீது வரிகளை விதித்து இந்த வர்த்தகப் போரை ஆரம்பித்தது என இதற்கு பதிலளிக்கும் வகையில் Dominic LeBlanc தெரிவித்தார்.
கடந்த மாதம் வர்த்தகப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா விதித்த இறுதி நேர நிபந்தனைகளை ஏற்க மறுத்துப் பிரதமர் Mark Carney, கனடிய தூதர்களைத் திரும்ப அழைத்து பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார்.
அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாக எவ்வித விரிவான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.
ஆனாலும் இரு நாடுகளும் தொடர்புகளை தொடர்ந்து பேணி வருவதாக Dominic LeBlanc குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் இறையாண்மையையும், நாட்டின் பொருளாதார நலன்களையும் முழுமையாக பாதுகாக்கும் வகையில் ஒரு சுமுகமான உடன்பாடு எட்ட வாய்ப்புள்ளது என பிரதமர் Mark Carney கருதினால் மட்டுமே, கனடா மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
