Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தின் வழியாகச் செயல்பட்டு வந்த ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை, RCMP வெற்றிகரமாக முறியடித்து நான்கு பேரைக் கைது செய்துள்ளது.
Pearson விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு வழிகளை பயன்படுத்தி, சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற குழுவை RCMP அதிகாரிகள் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்ததாக தெரியவருகிறது.
இந்த இரகசிய புலனாய்வு விசாரணையின் முடிவில், கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் அளவு குறித்த முழுமையான அறிக்கை வெள்ளிக்கிழமை (25) காலை வெளியானது.
Alliston நகரை சேர்ந்த 33 வயதான Anoshan Alfred, North York நகரை சேர்ந்த 40 வயதான Jeffrey Woolcock, Toronto நகரை சேர்ந்த 32 வயதான Jermaine Thompson, North York நகரை சேர்ந்த 42 வயதான Renaldo Clarke ஆகியோர் கைது செய்யப்பட்டதை RCMP அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இவர்கள் கனடாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கைதான நான்கு நபர்கள் மீதும் போதைப் பொருட்களைக் கடத்த முயன்றது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த சர்வதேச கடத்தல் பின்னணி குறித்து காவல்துறையினர் தங்கள் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் கைதானவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
