கனடா பெரும் எண்ணிக்கையில் மக்களை கட்டுப்பாடு இன்றி நாட்டுக்குள் அனுமதிப்பதன் மூலம் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
Donald Trump புதன்கிழமை (23) தனது Truth Social தளத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கனடாவின் தற்போதைய Liberal கட்சியின் இந்த அணுகுமுறை மிகவும் மோசமான விளைவுகளில் முடியும் எனவும் அவர் கூறினார்.
இது ஏற்கனவே கனடாவின் மிக அதிகப்படியான வேலையற்றோர் விகிதத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளதாகவும் Donald Trump சாடியுள்ளார்.
இந்த நிலையில் குடியேற்றம் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக அமெரிக்க ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கனடிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
குடியேற்றம் பொதுவாகக் கனடாவின் பொருளாதார செழுமைக்கு வழிவகுத்தாலும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு குடியேற்ற அளவைக் குறைத்து வருவதாக கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 5 சதவீதமாக குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது.
மேலும், 2026 முதல் 2028 வரை நிரந்தரக் குடியிருப்பாளர்களின் சேர்க்கையை ஆண்டுக்கு 3,800,000 என்ற அளவில் நிலைநிறுத்தவும் கனடா முடிவு செய்துள்ளது.
தவிரவும் ஏற்கனவே கனடாவில் தங்கி தேவையான திறன்களை பெற்றுள்ள புலம்பெயர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கவும் Mark Carney தலைமையிலான அரசாங்கம் புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் விமர்சனத்திற்கு மாறாக, கனடாவின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள், கனடாவிற்கு வரும் புதியவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதைக் காட்டுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கனடாவின் குடியேற்றம் 4.2 சதவீதமும், தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 0.7 சதவீதமும் சரிந்துள்ளது.
முன்னதாக முன்னாள் பிரதமர் Justin Trudeau. தற்போதைய பிரதமர் Mark Carney ஆகியோரின் 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்குக் காரணமாகும்.
கனடாவின் தற்போதைய வேலையற்றோர் விகிதம் August மாத கணக்குப்படி 6.4 சதவீதமாக உள்ளது.
இது அமெரிக்காவின் 4.1 சதவீதத்தை விட அதிகமாக இருந்தாலும், இரு நாடுகளும் வேலையற்றோர் விகிதத்தை கணக்கிடும் முறைகள் வெவ்வேறானவை என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் தற்போதைய வேலைவாய்ப்பு இழப்புகளுக்கு Donald Trump கனடிய இறக்குமதிகள் மீது விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகளும் ஒரு முக்கியக் காரணம் என புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது
