மத்திய இடைத் தேர்தல் வேட்பாளர் நியமன விவகாரத்தில் Pierre Poilievre கட்சிக்குள் கடும் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.
Ontario மாகாணத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை முறைப்படி தேர்ந்தெடுக்காதது குறித்து Pierre Poilievre கடும் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.
தன்னிச்சையாக வேட்பாளரை நியமித்ததாக Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
Conservative கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பதவி விலகும் Brantford நகர முதல்வரான Kevin Davis இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
Pierre Poilievre இந்த நியமனத்தை ஞாயிற்றுக்கிழமை (21) திடீரென அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் அதிருப்தியடைந்த கட்சியின் இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேடையை விட்டு உடனடியாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Brantford-Brant South தொகுதியின் Conservative நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Larry Brock, தனது அரச வழக்கறிஞர் பணிக்குத் திரும்புவதற்காக அறிவித்து கடந்த வாரம் தனது பதவியில் இருந்து விலகினார்.
இதனால் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பதவி விலகிய Larry Brock,பாதிரியாரும் நீண்டகாலக் கட்சி உறுப்பினருமான Dave Carrol என்பவரை தனது அரசியல் வாரிசாக இந்த இடைத்தேர்தலில் நிறுத்த விரும்பினார்.
ஆனால், உட்கட்சி வேட்பாளர் தேர்தல் நடத்தாமல் Pierre Poilievre நேரடியாக வேட்பாளராக அறிவித்ததால் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த அறிவிப்பு வெளியான சில நொடிகளிலேயே, மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Larry Brock, அதே தொகுதியில் 13 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Phil McColeman ஆகிய இருவரும் கூட்டத்தை விட்டு புறக்கணித்து வெளியேறினர்.
ஜனநாயக முறைப்படி வேட்பாளர் தேர்வு நடைபெற்றது தங்களின் அதிருப்திக்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தாமதமின்றி பிரச்சாரத்தை ஆரம்பிக்க ஏதுவாக கட்சித் தலைவர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நியமனத்தை மேற்கொண்டார் என Conservative கட்சித் தலைமை விளக்கம் அளித்துள்ளது.
இந்தத் தொகுதிக்கு இதுவரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவின் தேர்தல் விதிகளின்படி, ஒரு நாடாளுமன்ற தொகுதி வெற்றிடமான திகதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வியூகங்களுக்கு மத்தியில், Conservative கட்சிக்குள்ள வெடித்துள்ள இந்த அதிகாரப் போட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
