Toronto நகர சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய Shaun Chen தெரிவித்துள்ளார்
Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய சில நாட்களுக்குப் பின்னர், நகர சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக Shaun Chen தெரிவித்துள்ளார்.
2015 முதல் மத்திய அளவில் பிரதிநிதித்துவப் படுத்தி வந்த Scarborough North தொகுதியில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான தனது திட்டங்களை அவர் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு Ottawa-விற்கு பயணம் செய்தபோது ஏற்பட்ட வாகன விபத்தின் விளைவாக உருவான “குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக”, Shaun Chen இந்த மாதம் 15-ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகினார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், Shaun Chen Toronto மாவட்ட பாடசாலை வாரியத்தின் அறங்காவலராகவும், December 2014 முதல் August 2015 வரை அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
வியாழக்கிழமை (20) காலை நிலவரப்படி, Scarborough North தொகுதியில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் தற்போதைய நகரசபை உறுப்பினர் Jamaal Myers, முன்னாள் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong ஆகியோர் அடங்குகின்றனர்.
ஆனாலும் Shaun Chen வியாழன் காலை 10 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.
இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (21) வரை கால அவகாசம் உள்ளது.
Ontario-வில் Toronto நகரசபை உட்பட பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் முன்கூட்டிய வாக்களிப்பு காலம் October 6 முதல் October 11 வரையாகும்.
