கனடா, அமெரிக்கா வர்த்தக பிரதிநிதிகள் இந்த வாரத்தில் இரண்டாவது தடவையாக சந்திக்கின்றனர்.
புதிய வரிகளுக்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புகின்றனர்.
இந்த சந்திப்பு வியாழக்கிழமை (13) மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, கனடாவின் முதன்மை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் Janice Charette ஆகியோர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer-ரை நேரில் சந்திக்கவுள்ளனர்.
கனடாவின் பல்வேறு வகையான பொருட்கள் மீது 50 சதவீத அளவில் புதிய சுங்க வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிர்ணயித்த காலக்கெடு முடிவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
கனடிய பேச்சுவார்த்தை குழுவினர் இந்த வாரத்தின் பெரும்பகுதியை அமெரிக்கத் தலைநகரில் கழித்துள்ளனர்.
இருதரப்பு அதிகாரிகளும் எதிர்வரும் புதன் கிழமைக்கு (19) முன்னதாகவே அமெரிக்க ஜனாதிபதியிடம் ஒரு ஒப்பந்த வரைவை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக தெரியவருகிறது.
அடுத்த வாரம் Donald Trump நிர்வாகம் புதிய வரிகளை விதித்தால், மேலதிக வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆபத்தில் சிக்க கூடும் என கனடாவின் முன்னணி வர்த்தக பேச்சுவார்த்தையாளர் Janice Charette தனது அமெரிக்க சகாக்களை எச்சரித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் புதனன்று உறுதிப்படுத்தின.
