தேசியம்
செய்திகள்

Toronto தெருவிழா துப்பாக்கி மோதலில் இருவர் பலி – ஆறு பேர் வரை காயம்

Toronto தெரு விழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

Toronto-வில் பிரபலமான லத்தீன் தெருத் திருவிழா ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறையின் முன்னெடுக்கின்றனர்.

சனிக்கிழமை (11) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்; குறைந்தது நால்வர் பலத்த காயமடைந்தனர்.

ஒருவரையொருவர் குறிவைத்துத் தாக்கிய நபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு பரிமாற்றம் நடைபெற்றதாக காவல்துறை துணைத் தலைவர் Frank Barredo தெரிவித்தார்.

குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆண்டின் Salsa on St. Clair நிகழ்வின் முதல் நாள் இரவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, ​​இரவு 8 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு பரிமாற்றம் நிகழ்ந்தது.

இதில் பலியானவர்கள் இருவரும் ஆண்கள் என தெரியவருகிறது.

சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

மற்றொருவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தமது விசாரணை தொடரும் நிலையில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என சம்பவ இடத்தில் அமைக்கப்பட்ட கட்டளை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Toronto காவல்துறை துணைத் தலைவர் Frank Barredo தெரிவித்தார்.

இந்த பொறுப்பற்ற, வன்முறைச் செயலால் நான் மிகவும் கலக்கமும் கோபமும் அடைந்துள்ளேன் என  அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறிய Toronto நகர முதல்வர் Olivia Chow, இந்தத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தார்.

அந்தப் பகுதியின் நகரசபை உறுப்பினர்கள் Mike Colle, Josh Matlow ஆகியோரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த அர்த்தமற்ற வன்முறையால் நான் பேரதிர்ச்சி அடைந்துள்ளேன் என Ontario மாகாண முதல்வர் Doug Ford சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தான் “அதிர்ச்சியும் வேதனையும்” அடைந்ததாக பிரதமர் Mark Carney சமூக ஊடகப் பதிவு ஒன்றில் கூறினார்.

அதற்கு  பொறுப்பானவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு தனது முழு ஆதரவும் உள்ளது எனவும் பிரதமர் மேலும் கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் தான் “அதிர்ச்சியடைந்ததாக” Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.

வருடாந்த ‘TD Salsa on St. Clair’ நிகழ்வு St. Clair Avenue West) பகுதியில் நடைபெறுகிறது.

இது கனடாவின் முதன்மையான “லத்தீன் கலாச்சாரக் கொண்டாட்டம்” என குறிப்பிடப்படுகிறது.

இந்த இரண்டு நாள் கொண்டாட்டங்களின் போது இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

Ontario விளம்பரத்திற்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்?

Lankathas Pathmanathan

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளது – இலங்கை அரசு குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் கலைந்துரையாடல்

Lankathas Pathmanathan

Leave a Comment