Toronto பெரும்பாகத்தில் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக Toronto காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
யூத வழிபாட்டு தலங்கள், யூதப் பாடசாலைகள், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக சமூக விரோதிகளால் இளைஞர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக Toronto காவல்துறை தெரிவித்தது.
இளைஞர்களுக்குப் பணம் கொடுக்கப்படும் இந்த சம்பவங்களில் Toronto பெரும்பாக்கம் முழுவதும் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதாக காவல்துறை கூறுகிறது.
செவ்வாய்க்கிழமை (16) காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், GTA முழுவதும் நடந்த குறைந்தது 28 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிகளை கண்டுபிடித்ததாக காவல்துறை தெரிவித்தது.
அந்த ஆயுதங்கள், பல வெவ்வேறு சம்பவங்களில் பகிரப்பட்டிருக்கலாம் என காவல்துறை கூறியது.
இந்த இரண்டு துப்பாக்கிகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று நபர்களை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதில் 18 வயதான Sheldon Tracey-Stewart,19 வயதான Zara Jabbi ஆகியோர் அடங்குகின்றனர்.
March 10 அன்று அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் Zara Jabbi தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை குறிப்பிட்டது.

அமெரிக்க தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணையை, பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்புப் பிரிவின் ஆதரவுடன் ஒருங்கிணைந்த துப்பாக்கி, வன்முறை தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் RCMP ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்கக் குழு (INSET) ஆகியவையும் இந்த சம்பவம் குறித்து ஒரு இணை விசாரணையை நடத்தி வருகின்றன.
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு துப்பாக்கிகளில் ஒன்றிலிருந்து Etobicoke நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 18 வயதான Jayon Burgher என்ற மூன்றாவது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் Toronto காவல்துறை தெரிவித்துள்ளது.
“நாங்கள் இன்னும் துப்பாக்கிச் சோதனைகளை நடத்தி வருகிறோம்” எனக் கூறிய, Toronto காவல்துறை தலைமை அதிகாரி Myron Demkiw , மேலும் கைதுகளும் குற்றச்சாட்டுகளும் தொடரும் சாத்தியக்கூறு உள்ளதாக செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை (11) அவசரகால பணிக்குழுவினர் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்ட பின்னர், 45-calibre கைத்துப்பாக்கி, ஒன்பது millimetre கைத்துப்பாக்கி ஆகிய அந்தத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சோதனைகளின் போது, North York நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் Const. Marc Pinizzotto சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினரால் 19 வயதான Nicholas Bennett என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர், அதிகாரியின் மரணம் தொடர்பாக முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு ஒன்றை எதிர்கொள்கிறார்
கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தொடர்புடைய, March மாதம் நடந்த மேலும் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாகவும் Nicholas Bennett மீது குற்றம் சாட்டப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது
