Hantavirus பரவல் காரணமாக Ontario மாகாணத்தில் மூன்றாவது நபர் அடையாளம் காணப்பட்டார்.
இவர் Peel பிராந்தியத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் Sylvia Jones திங்கட்கிழமை (11) உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் MV Hondius என்ற உல்லாசக் கப்பலில் hanta தொற்று பரவியது.
இந்த கப்பலில் பயணித்த 130 பயணிகளில் நான்கு கனடியர்களும் அடங்குவர்.
இந்த நிலையில் 10 கனடியர்கள் இந்த தொற்றுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தது.
Grey-Bruce மாவட்டப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக Ontario சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தனர்.
இந்தத் தம்பதியருக்கு எந்த தொற்று அறிகுறிகளும் இல்லை என அமைச்சர் Sylvia Jones கூறினார்.
Ontario-வைச் சேர்ந்த மூன்றாவது நபர் ஒருவர், விமானப் பயணத்தின் போது உறுதிசெய்யப்பட்ட நோயாளி ஒருவருடன் சிறிது நேரம் தொடர்பில் இருந்திருக்கலாம் என மத்திய சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
தற்போது Peel பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த மூன்றாவது நபர், உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.
தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவரைக் கண்காணித்து வருவதாக Peel பிராந்திய பொது சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த நபர் Peel பிராந்தியத்தின் வசிப்பவர் அல்ல எனவும் மாறாக கனடாவிற்கு விருந்தினராக வருகை தந்தவர் எனவும் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அந்த நபர் தற்போது நலமாக உள்ளார் எனவும் அவருக்கு எந்த தொற்று அறிகுறிகளும் இல்லை எனவும் தெரிவித்த Peel சுகாதாரப் பிரிவு, அவர் தனிமைப்படுத்தப்பட்டு, பொது சுகாதாரத் துறையிடமிருந்து நாளாந்தம் உதவியை பெற்று வருவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால் Peel பிராந்திய சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்து “மிகக் குறைவு” எனவும், குடியிருப்பாளர்கள் எந்த ஒரு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கத் தேவையில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த மூன்று பேரும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை பின்பற்றி வந்தாலும், தற்போது அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட வில்லை எனவும் அமைச்சர் Sylvia Jones கூறினார்.
