இல்லமொன்றில் மூன்று பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Ontario மாகாணத்தின் Brockville நகரில் வியாழக்கிழமை (07) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இல்லமொன்றில் மரணங்கள் நிகழ்ந்ததாக காவல்துறையினரும் விடுக்கப்பட்ட அழைப்பின் பெயரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அதிகாரிகள் அந்த மரணங்களை சந்தேகத்திற்குரியதாக கருதினர்.
தங்களுக்கு கிடைத்த மேலதிக தகவலின் அடிப்படையில், நகரின் புறநகர் பகுதியில் உள்ள வேறொரு முகவரிக்குச் சென்றதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
“இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும், 17 வயது இளைஞர் ஒருவர், அந்த முகவரியில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக மூன்று கொலை குற்றச்சாட்டுகளும், காவல்துறை அதிகாரியை தாக்கிய ஒரு குற்றசாட்டும் பதிவானது.
இந்தச் சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் எனவும் காவல்துறை கூறுகிறது.
இந்த விசாரணை உணர்வுப்பூர்வமானதும் சிக்கலானதும் எனக் கூறும் காவல்துறை இது குடும்பங்கள், அன்புக்குரியவர்கள், சமூகத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் ஆழமான தாக்கத்தை நாங்கள் உணர்கிறோம் எனவும் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (08) பிணை விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் அவரது அடையாளம் வெளியிடப்படாது என்பதும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
