November 28, 2026
தேசியம்
செய்திகள்

Quebec Bill-21 உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கனடிய அரசியல் தலைவர்கள் கலவையான எதிர்வினை!

Quebec மாகாணத்தின் மதச்சார்பின்மை சட்டத்தை கனடிய உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மை சட்டம் Bill-21 செல்லுபடியாகும் என கனடிய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (27) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

அரசு ஊழியர்கள் பணியின் போது மத அடையாளங்களை அணிவதற்கு தடை விதிக்கும் Quebec மாகாணத்தின் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மை சட்டம் Bill-21 செல்லும் எனக் கனடிய உச்ச நீதிமன்றம்  தீர்ப்பை வழங்கியுள்ளது.

2019-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு Quebec மாகாண அரசு பயன்படுத்திய அரசியலமைப்பு உரிமைகளை மீறும் சிறப்பு விதியை (notwithstanding clause)  செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு கனடா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.

இந்தத் தீர்ப்பு Quebec மாகாணத்தில் மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்ட மாகாண முதல்வர் Paul St-Pierre Plamondon, அது குறுகிய கால சட்ட நிலைத்தன்மையை வழங்குவதாக வரவேற்றார்.

அதே நேரத்தில், மாகாணங்களின் சுயாட்சிக்கு இது பின்னடைவு எனவும், நீதிமன்றங்கள் கட்டுப்பாடற்ற அறிவிப்புகளை வழங்க அனுமதிப்பது அரசியலமைப்பு உரிமைகளை மீறும் சிறப்பு விதியை பலவீனப்படுத்துகிறது எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஏனைய மாகாண முதல்வர்களுடன் Toronto-வில் நடைபெறும் சந்திப்பில் இந்த விவகாரத்தை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் Paul St-Pierre Plamondon கூறினார்.

இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மதிப்பதாக கூறிய பிரதமர் Mark Carney, அனைத்து நிலைகளிலும் உள்ள அரசாங்கங்கள் அனைத்துக் கனடியர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்கத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இந்தத் தீர்ப்பை தொடர்ந்து தனது அரசாங்கம் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் சிறப்பு விதியை பயன்படுத்தப் போவதில்லை எனவும் பிரதமர் கூறினார்.

இந்த உச்ச நீதிமன்ற முடிவு Quebec தேசிய சபைக்குக் கிடைத்த முக்கிய வெற்றி என Bloc Québécois தலைவர் Yves-François Blanchet பாராட்டினார்.

அரசியலமைப்பு உரிமைகளை மீறும் சிறப்பு விதியை பயன்படுத்துவதன் பொருத்தத்தையும் சட்டபூர்வமான தன்மையையும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும், இதன் மூலம் மதச்சார்பின்மை, French மொழியை பாதுகாக்கும் உரிமையை Quebec முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2019-ல் இச்சட்டத்தை அறிமுகப்படுத்திய Coalition Avenir Québec (CAQ) கட்சியின் இடைக்காலத் தலைவர் Mathieu Lévesque, இத்தீர்ப்பை “Québec தேசத்திற்கும் CAQ கட்சிக்கும் கிடைத்த வெற்றி” என வர்ணித்தார்.

முன்னாள் Québec முதல்வர் François Legault, இச்சட்டம் குறித்து தாம் மிகவும் பெருமைப்படுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

தலையீடுகள் இன்றித் தகுந்த சூழல்களில் இந்தச் சிறப்பு விதியைப் பயன்படுத்த Quebec-கிற்கு உள்ள உரிமையை இத்தீர்ப்பு காட்டுவதாகக் கூறிய Quebec Liberal கட்சித் தலைவர் Charles Milliard, கடந்த காலத்தைப் போலவே எதிர்காலத்திலும் Liberal கட்சி ஆட்சியில் இருக்கும்போது இந்த விதியைப் பயன்படுத்த தயங்காது என தெரிவித்தார்.

Bill-21 இயற்றப்பட்டபோதே அதை எதிர்த்த Québec solidaire கட்சி, ஆசிரியர்கள், பராமரிப்பாளர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பாரபட்சமானது என கூறி, இத்தீர்ப்புக்கு ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

Alberta முதல்வர் Danielle Smith இத்தீர்ப்பை மாகாண உரிமைகளுக்கும் கூட்டாட்சி சமநிலைக்கும் கிடைத்த வெற்றியாக குறிப்பிட்டார்.

அதே சமயம், சட்டம் சாசன உரிமைகளை மீறுகிறதா என்பது குறித்து நீதிமன்றங்கள் கட்டுப்படுத்தப்படாத அறிவிப்புகளை வழங்கலாம் என்ற பகுதியை British Columbia, Manitoba மாகாணங்கள் வரவேற்றுள்ளன.

ஆனாலும் குறிப்பிட்ட Bill-21 சட்டத்தை சட்டரீதியான இனவெறி என Manitoba முதல்வர் Wab Kinew விமர்சித்தார்.

Bill-21 சட்டத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு “மிகவும் ஏமாற்றமளிப்பது, பாரபட்சமானது என Brampton நகர முதல்வர் Patrick Brown கண்டித்தார்.

எந்த ஒரு கனடியரும் தங்களின் மத நம்பிக்கைக்கும் வேலைக்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட கூடாது என அவர் வாதிட்டார்.

Bill-21-க்கான அரசியலமைப்பு உரிமைகளை மீறும் சிறப்பு விதி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதால், 2029-க்குள் அதை புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தச் சட்டம் இஸ்லாமிய பெண்களின் hijabs, சீக்கியர்களின் தலைப்பாகை, யூதர்களின் kippas உள்ளிட்ட மத அடையாளங்களை பாதிப்பதாக விமர்சகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

அனுமதி மறுக்கப்படும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

35 சதவீதத்தினர் மட்டுமே இதுவரை booster தடுப்பூசியை பெற்றுள்ளனர்: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

November 4ஆம் திகதி Don Valley மேற்கு இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment