Toronto மாவட்டக் கல்வி சபையின் (TDSB) மூத்த நிர்வாக அதிகாரி Stacey Zucker பதவி விலகினார்.
TDSB மூத்த நிர்வாக அதிகாரியும், இரண்டு முறை இடைக்காலக் கல்வி இயக்குநராக பணியாற்றியவருமான Stacey Zucker, தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்த முடிவு பெற்றோர்கள், கல்விச் சபை உறுப்பினர்கள் மத்தியில் கல்விச் சபையின் தலைமைத்துவ நடைமுறைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
கல்விச் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி Camillo Cipriano வெள்ளிக்கிழமை (27) ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தலைமை நிதி, செயல்பாட்டு அதிகாரியான Stacey Zucker எதிர்வரும் January மாத இறுதியில் தனது பொறுப்பில் இருந்து விடைபெறுவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டு முறை TDSB-யின் இடைக்காலக் கல்வி இயக்குநராகப் பணியாற்றிய Stacey Zucker, George Brown Polytechnic கல்வி நிறுவனத்தில் நிதித் துறை துணைத் தலைவர், தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த ஆண்டு முதல் Toronto மாவட்டக் கல்வி சபைக்குள் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.
செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாக கூறி 2025-ஆம் ஆண்டில் முதல்வர் Doug Ford அரசு கல்விச் சபையைத் தனது நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டுவந்து, முன்னாள் Metrolinx ஆலோசகர் Rohit Gupta மேற்பார்வையாளராக நியமித்தது.
இந்த நிலையில் மாகாண அரசின் மேற்பார்வை கல்விச் சபையைச் சீரழித்து விட்டதாகவும், நிர்வாகத்தில் நிலவும் பாரபட்சம் காரணமாக Stacey Zucker போன்ற மூத்த அதிகாரிகளால் மாற்றங்களைக் கொண்டு வரவோ அல்லது பதவி உயர்வு பெறவோ முடியவில்லை என Beaches-East York தொகுதி கல்விச் சபை உறுப்பினர் Michelle Aarts குற்றம் சாட்டியுள்ளார்.
Ontario-வின் மிகப்பெரிய கல்வி சபையான TDSB-யில் தற்போது ஊழியர்களிடையே “பயத்தின் கலாச்சாரம்” நிலவுவதாகவும், கடந்த ஆண்டு முன்னாள் கல்வி இயக்குநர் Clayton La Touche பணி நீக்கம் செய்யப்பட்டது அனைத்துக் கல்வி சபைகளுக்கும் விடுக்கப்பட்ட ஒரு அரசியல் எச்சரிக்கையாக நோக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
