கனடாவுக்கு சீனாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டிற்கு சீனா சென்றுள்ள கனடிய பிரதமர் சீன ஜனாதிபதியை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் கனடா-சீனா மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
மேலும், தற்போதைய வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டித்து விரிவுபடுத்துவதை வரவேற்றதோடு, வரிகளைக் குறைப்பதற்காக அதனை மேலும் விரிவுபடுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் நீடித்த நன்மைகளை வழங்கும் ஆக்கப்பூர்வமான கூட்டாண்மையை உருவாக்குவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாக இந்தப் பயணத்தை இரு நாடுகளின் தலைவர்களும் வரவேற்றனர்.
இந்தச் சந்திப்பில், கனடாவின் உறைந்த பன்றி இறைச்சி, கடல் உணவுப் பொருட்கள் மீதான வரிகளை குறைக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
பதிலுக்கு கனடாவில் உற்பத்தி செய்யப்படாத சில சீன எஃகு, அலுமினிய பொருட்களுக்குக் கனடா வரி விலக்கு அளித்துள்ளது.
இதன் மூலம் கனடா-சீனா வர்த்தகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் குறைக்கப்பட்ட வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு, புதிய எரிசக்தி, விவசாயப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, சுற்றுலா ஆகிய துறைகளில் வலுவான ஒத்துழைப்பை பேணவும் கனடா சீனாவுடன் இணைந்து செயல்படும் என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
இரு நாடுகளும் வேறுபாடுகளை கடந்து பரஸ்பர மரியாதை, சமத்துவத்தின் அடிப்படையில் ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்டும் என சீன ஜனாதிபதி Xi Jinping வலியுறுத்தினார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சீன மின்சார வாகனங்கள் மீதான 100% வரியை 6.1% ஆகக் குறைத்த கனடா, ஆண்டுக்கு 49,000 சீன வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தது.
இதற்குப் பதிலாக கனடிய பொருட்கள் மீதான வரிகளை சீனா தளர்த்தியது.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவுக்கான கனடிய ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்து $33.5 பில்லியனை எட்டியுள்ளது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
