கனடா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடந்த சில நாட்களுக்குள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் வர்த்தக வரிப் போருக்கு மத்தியில், கனடாவும் அமெரிக்காவும் கடந்த சில நாட்களுக்குள் பரஸ்பரம் பயனளிக்கும் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி Doanld Trump, கனடியப் பிரதமர் Mark Carney ஆகியோர் வழக்கமாகப் பேசி வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் எப்போது எட்டப்படும் என்பதற்கான துல்லியமான காலக்கெடுவை அறிவிக்க Jamieson Greer மறுத்தார்.
இதில் காலக்கெடுவை விட ஒப்பந்தத்தின் உள்ளடக்கமும் சாராம்சமுமே மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2026-ம் ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே முன்னர் இருந்ததைப் போன்ற கட்டுப்பாடற்ற தடையற்ற வர்த்தக நிலைக்கு திரும்பவே கனடா விரும்புகிறது என Jamieson Greer சுட்டிக்காட்டினார்.
ஆனாலும் அமெரிக்காவின் விநியோகச் சங்கிலிகளை பாதுகாக்கும் வகையிலான ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வெள்ளை மாளிகை தீவிரமாக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை, மேலவை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையை இழந்தது.
இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகளால் ஏற்பட்ட பணவீக்கம் வாக்காளர்கள் குடியரசுக் கட்சிக்கு எதிராக வாக்களிக்க முக்கியக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
தேவைக்கேற்ப அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக கூறிய Jamieson Greer, கனடாவுடன் வரிகள் தொடர்பான ஒரு நிலையான தெளிவை உருவாக்க ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
