கனடாவில் தீவிரக் குற்றச் செயல்கள் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக Conservative கட்சி தெரிவிக்கிறது.
இதில் மத்திய Liberal அரசின் பொதுமக்கள் பாதுகாப்புச் செயல்பாடுகளை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் குற்றங்கள் குறைந்து விட்டதாக Liberal அரசு விளம்பரப்படுத்துவது கனடியர்களை திசைதிருப்பும் செயல் என Conservative கட்சியின் விமர்சகர் Arpan Khanna கடுமையாகச் சாடியுள்ளார்.
2015-ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ள குற்றங்களின் புள்ளி விவரங்களை வியாழக்கிழமை (12) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் அவர் பட்டியலிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் கனடாவில் மிகக் கொடூரமான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:
வன்முறை குற்றங்கள் 2015-ம் ஆண்டு முதல் சுமார் 57 சதவீதம் அதிகரித்துள்ளது.
சராசரியாக ஒவ்வொரு 50 வினாடிகளுக்கும் ஒரு வன்முறை குற்றம் பதிவாகிறது.
மிரட்டி பணம் பறிக்கும் குற்றங்கள் பத்து ஆண்டுகளில் 297 சதவீதம் உயர்ந்துள்ளது.
Toronto பெரும்பாக்கத்தில் மட்டும் ஒரே ஆண்டில் Home Invasions குற்றங்கள் 47.4 சதவீதம் அதிகரித்துள்ளன.
இதே காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 77 சதவீதம், மனிதக் கடத்தல் 119 சதவீதம் உயர்ந்துள்ளது.
காவல்துறையில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 121 சதவீதமும், சிறுவர் பாலியல் சுரண்டல் தொடர்பான குற்றங்கள் 195 சதவீதம் அதிகரித்துள்ளன.
2020 முதல் 2024 வரையிலான காலத்தில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக Conservative கட்சியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
குற்றவாளிகளுக்கான கட்டாயச் சிறை தண்டனையை நீக்கிய சட்டமூலம் C-5, தொடர் குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைக்க வழிவகுத்த சட்டமூலம் C-75, சட்டமூலம் C-16, சட்டமூலம் C-14 ஆகியவையே குற்றவாளிகள் எளிதில் வெளியேற காரணம் என Arpan Khanna குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்குத் தீர்வாக கனடியர்களின் தற்காப்பு உரிமை சட்டங்களை வலுப்படுத்துதல், வன்முறை வீடுடைப்பு அத்துமீறல்களுக்கு குற்றவியல் சட்டத்தில் தனிப்பட்ட கடுமையான பிரிவை உருவாக்குதல், தொடர் வன்முறைக் குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதை தடுத்து, பொதுப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய மூன்று புதிய யோசனைகளை Conservative கட்சி முன்மொழிந்துள்ளது.
ஆனாலும் கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் கனடாவில் காவல்துறையில் பதிவான ஒட்டுமொத்தக் குற்றங்கள் 2.4 சதவீதம் குறைந்துள்ளன.
தவிரவும் தேசிய குற்றத் தீவிரக் குறியீடும் (Crime Severity Index – CSI) 4.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
