தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

முன்னெப்போதும் இல்லாத சாதனை: நகராட்சித் தேர்தலில் 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டி!

எதிர்வரும் நகரசபைத் தேர்தலில் குறைந்தது 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேசியம் உறுதிப்படுத்துகிறது.

இது கனடாவின் நகராட்சித் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத தமிழ் பேசும் வேட்பாளர்களின் எண்ணிக்கையாகும். இம்முறை பல்வேறு நகரங்களின் நகர முதல்வர், பிராந்திய உறுப்பினர், நகர சபை உறுப்பினர்கள், கல்விச் சபை அறங்காவலர் (Trustee) பதவிகளுக்கு தங்களது திறமையையும், சமூக சேவையையும் முன்னிறுத்திப் பல தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். Toronto நகரில் 14, Markham நகரில் 5, Durham பிராந்தியத்தில் 7, Waterloo நகரில் 1, Ottawa நகரில் 1, Brampton நகரில் 1, Shelburn நகரில் 1, Kingsville நகரில் 1, Cornwall நகரில் 1 என தமிழர்கள் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இவர்களின் தேர்தல் பயணமும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் ஒரு மாபெரும் ஜனநாயகத் திருவிழாவைப் போல காட்சியளிக்கின்றன.

நகர முதல்வர் பதவிக்கான போட்டிகள் (Mayoral Race)

நகரங்களின் மிக உயரிய பதவியான நகர முதல்வர் பதவிக்கு நான்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

ஹர்ஷினி ராஜ்மோகன் (Harshini Rajmohan) Whitby நகர முதல்வர் வேட்பாளராகக் களம் இறங்கி, நகரின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான வாக்குறுதிகளுடன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹர்ஷினி ராஜ்மோகன்

ஜெயஸ் பாலஸ்காந்தன் (Jeyas Balaskanthan) Waterloo நகர முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டு, மாணவர்களின் நலன், தொழில்நுட்ப நகரமான Waterloo-வின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளார்.

ஜெயஸ் பாலஸ்காந்தன்

நீல் சரவணமுத்து (Neil Saravanamuttoo) தலைநகரான Ottawa நகரின் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுகிறார். தலைநகரத்தின் போக்குவரத்து நெரிசல், வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வுகளைத் தர அவர் திட்டமிட்டுள்ளார்.

நீல் சரவணமுத்து

பிரதீப் (PK) உதயகுமார் (Pratheeb (PK) Uthayakumar) Shelburne நகரத்தின் நகர முதல்வர் பதவிக்குத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, சிறு நகரங்களின் வளர்ச்சிக்கு வித்திட உழைக்கிறார்.

பிரதீப் (PK) உதயகுமார்

ரோஷன் நல்லரத்தினம் (Roshan Nallaratnam) Kingsville நகரத்தின் முதல்வர் மேயர் பதவிக்கான போட்டியில் இறங்கி, விவசாயம், உள்ளூர் வணிகங்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டுள்ளார்.

ரோஷன் நல்லரத்தினம்

Toronto நகரசபை உறுப்பினர் பதவிகளுக்கான கடும் போட்டி

இம்முறை தேர்தலில் Toronto நகரின் Scarborough பகுதிகளில் தமிழ் வேட்பாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படுகிறது.  ஜனநாயக ரீதியில் இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இதன்   ஆரோக்கியத் தன்மை ஒரு சமூகமான கேள்விக் குறியாகிறது.

Scarborough-Rouge Park தொகுதியில் நான்கு தமிழர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். தற்போதைய நகர சபை உறுப்பினரான அனுபவமிக்க நீதன் சான் (Neethan Shan), புதியவர்களாக தர்ஷன் காசிநாதன் (Dharshan Casinathen), கண்ணன் ஸ்ரீ ஜூனியர் (Kannan S’ree Jr) சோமாஸ் கணேசபிள்ளை (Somas Kaneshapillai) ஆகியோர் இங்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் கண்ணன் ஸ்ரீ ஜூனியர், சோமாஸ் கணேசபிள்ளை ஆகியோர் போட்டியில் இருந்து விலகுவதாக சமூக ஊடக பதிவுகள் பகிரப்பட்டாலும், அவர்கள் தமது நியமனத்தை மீளப் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் அவர்களின் பெயர்களும் வேட்பாளர் அடையில் இடம் பிடிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீதன் சான், தர்ஷன் காசிநாதன், கண்ணன் ஸ்ரீ ஜூனியர், சோமாஸ் கணேசபிள்ளை

Scarborough-Guildwood தொகுதியில் புதியவர்களான அருண் சிவநந்தன் (Arun Sivanandan), நாச்சி ராமசாமி (Nachi Ramasamy) ஆகிய இரு தமிழர்கள் போட்டியிடுகிறார்கள்.

அருண் சிவநந்தன்
நாச்சி ராமசாமி

Scarborough Centre தொகுதியில் கிரிஷன் வீரசிங்கம் (Krissan Veerasingam), மதுரா சண்முகரத்தினம் (Madura Shanmugaratnam) ஆகிய இரு இளம் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

கிரிஷன் வீரசிங்கம்
மதுரா சண்முகரத்தினம்

Scarborough Southwest தொகுதியில் கல்வி, சமூக நலனில் அக்கறை கொண்ட தற்போதைய நகர சபை உறுப்பினரான பார்த்தி கந்தவேல் (Parthi Kandavel) மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தற்போது OPP விசாரணை ஒன்றை எதிர்கொள்ளும் நிலையில் தேர்தலை எதிர்கொள்கிறார்.

பார்த்தி கந்தவேல்

Scarborough North தொகுதியில் பெண்களின் குரலாக பிரவீனா சத்தியானந்தம் (Piravena Sathiyanantham) இங்கு போட்டியிடுகிறார்.

பிரவீனா சத்தியானந்தம்

Scarborough-Agincourt தொகுதியில் சமூகத்தில் சமத்துவத்தையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்ய சிந்தியா விஜயராஜன் (Sindia Vijayarajan) களமிறங்கியுள்ளார்.

சிந்தியா விஜயராஜன்

Don Valley North தொகுதியில் நகரின் வடக்குப் பகுதியில் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் ரோய் சமாதானம் (Roy Samathanam) போட்டியிடுகிறார்.

ரோய் சமாதானம்

பிற நகரங்களின் நகரசபை உறுப்பினர் (Councillor) பிராந்திய உறுப்பினர் (Regional Councillor) பதவிகள்

Toronto நகருக்கு வெளியேயும் தமிழ் வேட்பாளர்களின் முழக்கம் பலமாக ஒலிக்கிறது.

Ajax நகரின் இரண்டாவது தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கு ஆனரஸ் அடைக்கலம் (Andras Adaikkalam) போட்டியிட, அதே தொகுதியின் பிராந்திய உறுப்பினர் (Regional Councillor) பதவிக்கு ரஞ்சித் பரணிவாசகம் (Ranjith Paranivasagam) போட்டியிடுகிறார்.

ஆனரஸ் அடைக்கலம்
ரஞ்சித் பரணிவாசகம்

Brampton நகரத்தின் பிராந்திய உறுப்பினர் (Regional Councillor) பதவிக்கு சிந்தியா ஸ்ரீ பிரகாஷ் (Cynthia Sri Pragash) போட்டியிட்டு நகரின் பன்முகத்தன்மையை மேம்படுத்தப் பாடுபடுகிறார்.

சிந்தியா ஸ்ரீ பிரகாஷ்

Markham நகரின் 7-ஆம் வட்டார நகர சபை உறுப்பினர் பதவிக்கு கிள்ளி செல்லையா (Killi Chelliah) போட்டியிடுகிறார். அதேபோல, 5 ஆம் வட்டார நகர சபை உறுப்பினர் பதவிக்கு தாமிரா ரகிகரன் (Thamiraa Ragikaran) களத்தில் உள்ளார்.

கிள்ளி செல்லையா
தாமிரா ரகிகரன்

Pickering நகரில் 3 ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் பதவிக்கு நடா ராஜ்குமார் (Nada Rajkumar) போட்டியிட, 1 ஆம் வட்டார நகர சபை உறுப்பினர் பதவிக்கு பிரியா வடிவேல் (Priya Vadivel) மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

நடா ராஜ்குமார்
பிரியா வடிவேல்

Cornwal நகர சபைக்குத் தனது திறமையான சேவையை வழங்க வாமினி மோகனதாஸ் (Vamini Mohanathas) போட்டியிடுகிறார்.

வாமினி மோகனதாஸ்

கல்விச் சபை அறங்காவலர் பதவிகள் (School Board Trustees)

எமது எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்தவும் பல தமிழர்கள் கல்விச் சபை தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள்.

Markham 5 & 7 ஆம் வட்டாரத்தில் (York Region District School Board): மூன்று தமிழர்களுக்குள் போட்டி நிலவுகிறது. கரிஷன் ரவிசங்கர் (Garishan Ravishankar), ஹேமமாலினி வெங்கடராமன் (Hemamalini Venkataraman) ருக்சன் பரா (Rukshan Para) ஆகிய மூவரும் ஒரே கல்விச் சபை பதவிக்காகப் போட்டியிட்டு, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குத் தங்களின் வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.

கரிஷன் ரவிசங்கர்
ஹேமமாலினி வெங்கடராமன்
ருக்சன் பரா

Toronto கல்விச் சபை (TDSB): 12 ஆம் வட்டாரத்தில் முன்னாள் கல்விச்சபை உறுப்பினர் அனு ஸ்ரீஸ்கந்தராஜா (Anu Sriskandarajah) போட்டியிடுகிறார். அவரை எதிர்க்கும் வேட்பாளர்களில் தமிழரான விமுத்தன் நந்தீஸ்வரர் (Vimuththan Nantheeswarar) உள்ளார். 11 ஆம் வட்டாரத்தில் ரவிச்சா ரவிந்திரன் (Ravicha Ravinthiran) களத்தில் உள்ளார்.

அனு ஸ்ரீஸ்கந்தராஜா
விமுத்தன் நந்தீஸ்வரர்
ரவிச்சா ரவிந்திரன்

Toronto கத்தோலிக்க கல்விச் சபை (TCDSB): 8ஆம் வட்டாரத்தில் கத்தோலிக்க கல்விச் சபையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மேரி கியூரி போல் (Mary Cury Paul) போட்டியிடுகிறார்.

மேரி கியூரி போல்

Druham பிராந்தியம் (Durham District School Board) கல்விச் சபை அறங்காவலர் பதவிக்கு மயூரி முருகதாசன் (Mayoorey Murugathasan), சிந்துஜா கனகேஸ்வரன் (Sinthuja Kanageswaran) ஆகியோர் போட்டியிட்டு மாணவர்களின் நல்வாழ்வுக்குக் குரல் கொடுக்கிறார்கள்.

மயூரி முருகதாசன்
சிந்துஜா கனகேஸ்வரன்

இந்தத் தேர்தல், கனடாவில் வாழும் தமிழ் சமூகத்தின் அரசியல் முதிர்ச்சியையும், வாழும் நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் மனப்பாங்கையும் காட்டுகிறது. இந்த நிலை அவர்கள் தேர்தலில் வெற்றிபெறா விட்டாலும் எதோ ஒரு வகையில் தொடர்ந்தால் ஒரு சமூகமாக அது பெரும் வெற்றியே!

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

2020: கனடிய அரசியல் நிலை என்ன?

Gaya Raja

Toronto நகர முதல்வர் பதவி துறப்பும் ஈழத்தமிழரும்

Lankathas Pathmanathan

தேசிய நாயகன் கருணா வின்சென்ற்

thesiyam

Leave a Comment