தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

இமாலயப் பிரகடன முடிவின் பின்னணியில் செயல்பட்ட CTC நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்: NCCT நேரடியாக வலியுறுத்தல்?

தெருவிழாவை இம்முறை கனடிய தமிழரின் பெருவிழாவாக நடத்த பேரவைக்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை!

இமாலயப் பிரகடனம், மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஆகிய முடிவுகளின் பின்னணியில் செயல்பட்ட கனடிய தமிழர் பேரவையின் (பேரவை / CTC) நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டியதன் அவசியத்தை கனடியத் தமிழர் தேசிய அவை (தேசிய அவை / NCCT) வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

CTC – NCCT சந்திப்பு!

கனடிய தமிழர் பேரவைக்கும், கனடியத் தமிழர் தேசிய அவைக்கும் இடையிலான சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது. இந்த சந்திப்பில் கடந்த 15 வருடங்களுக்கு மேலான காலத்தில் பேரவை தமிழர்களுக்கு எதிராக இழைத்ததாக கருதப்படும் பல்வேறு தவறுகளை தேசிய அவை சுட்டிக்காட்டியதாக சந்திப்பில் நேரில் கலந்து கொண்ட பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் மூலம் தேசியம் உறுதிப்படுத்தியது. Brampton நகரில் பேரவை நிர்வாக உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் ஞாயிறு காலை முதல் மதியம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தேசிய அவை முன்வைத்த பதவி விலகல் கோரிக்கை, பேரவையின் நிர்வாக மாற்றம் குறித்த கனடிய தமிழர் சமூகத்தின் தொடரும் அழைப்பை புதுப்பித்துள்ளது – நியாயப்படுத்தி உள்ளது.

 

தேசிய அவை முன்வைத்த விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் செவிமடுத்த பேரவையினர் தமது நிர்வாக உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்றில் கலந்துரையாடிய பின்னர் தமது பதில்களை தேசிய அவையினரிடம் தெரிவிப்பதாக உறுதியளித்த நிலையில் இந்த சந்திப்பு முடிவுக்கு வந்துள்ளது. அதன் பின்னர், இரு தரப்பினருக்கும் இடையில் சில தொலைபேசி உரையாடல்கள் ஞாற்று மாலையும், பின்னிரவும் நிகழ்ந்த போதிலும் தமது அடிப்படை கோரிக்கைகளை பேரவை உள்வாங்கவில்லை என தேசிய அவை கருதுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

தமது அடிப்படை கோரிக்கைகளை பேரவை உள்வாங்கவில்லை என தேசிய அவை கருதுகிறது?

பேரவைக்குள் நீண்ட காலமாக தொடரும் தலைமைத்துவத்தின் பரந்த தோல்விகள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதியாகின்றன. இமாலயப் பிரகடனம், மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஆகிய முடிவுகளை உண்மையாக எடுத்தவர்கள் குறித்த பேரவையின் தொடர் மௌனம் கனடிய தமிழர் சமூகத்துக்கு அவமதிப்பாகும். இது ஒன்றும் தனிப்பட்ட ஒரு நபர் குறித்த விமர்சனமல்ல – இது தோல்வியை நோக்கி சென்று விட்ட ஒரு அமைப்பின், ஒரு சமூகத்திற்கு எதிரான தொடர் நகர்வின் வெளிப்பாடாகும்.

இந்த முடிவுகள் தற்செயலானவை அல்ல. பேரவையினால் திட்டமிட்டு எடுக்கப்படும் தொடர்ச்சியான முடிவுகளை தமிழர் விரோதம் என்று மட்டுமே விவரிக்க முடியும். இவற்றையெல்லாம் வெறும் தவறுகளாக மாத்திரம் நோக்க முடியாது. அவை தலைமைத்துவ முடிவுகள். இந்த முடிவுகளுக்கும் அவை சமூகத்தில் ஏற்படுத்திய தீங்குக்கும் அந்த முடிவுகளை எடுத்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

கனடிய தமிழர் கூட்டு (கூட்டு) பேரவையுடன் நடத்திய சந்திப்புகளில் தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கையும் அது தான். இப்போது தேசிய அவையும் இதே கோரிக்கையை பேரவையிடம் முன்வைக்கிறது.

தோல்வியை நோக்கி சென்று விட்ட ஒரு அமைப்பின், ஒரு சமூகத்திற்கு எதிரான தொடர் நகர்வின் வெளிப்பாடு!

கடந்த 18 மாதங்களாக, தமது தவறுகளை ஏற்றுக் கொள்வதாக பேரவை தனிப்பட்ட முறையில் கூறியுள்ளதே தவிர, அவற்றில் எதுவும் தமிழர் சமூகம் எதிர்பார்க்கும் உண்மையான சீர்திருத்தம் அல்லது கட்டமைப்பு மாற்றத்திற்கு வழி வகுக்கவில்லை. அண்மைய மாதங்களில் “மன்னிப்பு” அல்லது “ஆழ்ந்த கவலை” என்ற சொற்தொடர்கள் உள்ளடக்கிய சில அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை மாற்றத்திற்கான அடிப்படை முயற்சிகள் இல்லை என்பதே நிதர்சனமாகும். பேரவையில் உடனடி மாற்றம் அவசியமானது. அது அவர்களின் மௌனம் என்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும்.

முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட தமிழர் தெருவிழா, 2024 -ஆம் ஆண்டு பேரவையின் தமிழர் விரோத போக்கினால் பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. 2025-இல் தெருவிழாவுக்கு சில வாரங்கள் மாத்திரமே உள்ளன. பேரவையின் தலைமையில் பொறுப்பற்ற தொடர் நகர்வுகளால் தமிழர்கள் தெருவிழாவை புறக்கணிக்கும் முடிவை மீண்டும் இந்த ஆண்டு எடுக்கும் போது, அல்லது மக்கள் ஆதரவு இழந்து, இந்த ஆண்டு தெருவிழா நடைபெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்படும் போது, அதற்கு பேரவையின் இன்றைய நிர்வாகம் தன்னைத்தானே குறை கூற வேண்டும்.

இம்முறையும் தெருவிழா தோல்வியடையும் நிலைக்கு வந்தால், அதற்கான காரணம் மக்களோ அல்லது போராட்டக்காரர்களோ இல்லை. அது பேரவை தலைமையின் முழுத் தவறாகும்.

பேரவை தலைமையின் முழுத் தவறு!

இந்த நிலையை மாற்றி, தெருவிழாவை கனடிய தமிழரின் பெருவிழாவாக இம்முறை மாற்றியமைக்க பேரவைக்கு ஒரு வருட கால அவகாசம் இருந்தது. ஆனாலும் இறுதிவரை இழுத்தடிப்பு நகர்வின் மூலம் சமூகத்தின் நியாயமான விமர்சனங்களை கடந்து செல்லலாம் என்ற பேரவையின் எண்ணம் பலிக்கவில்லை.

இறுதி நேர காய் நகர்த்தலாக முதலில் கனடிய தமிழர் கூட்டுடன் (கூட்டு) சந்தித்த பேரவை, பின்னர் தேசிய அவையுடனும் சந்தித்தது. அந்த சந்திப்பும் பேரவைக்கு பின்னடைவை தந்துள்ளதாகவே தோன்றுகிறது.

இந்த நிலையை மாற்றி, தெருவிழாவை இம்முறை கனடிய தமிழரின் பெருவிழாவாக நடத்த பேரவைக்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை. சமூகத்தின் நியாயமான விமர்சனங்களை செவிமடுத்து, உண்மையான சீர்திருத்தம், கட்டமைப்பு மாற்றத்திற்கு வழி வகுத்து, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் சிறப்பான தெருவிழா இன்னமும் சாத்தியமே!

 

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

Donate to seek the support of the Premier of Ontario regarding the Tamil Genocide Bill? An invitation on behalf of MPP Vijay Thanigasalam!

thesiyam

தமிழர்களை சந்தித்தார் Olivia Chow!

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment