Toronto நகர முதல்வர் தேர்தலில் தற்போதைய நகர முதல்வர் Olivia Chow, அவரது முதன்மை எதிர் போட்டியாளரான முன்னாள் நகர சபை உறுப்பினர் Brad Bradford ஆகிய இருவருக்கும் இடையிலான போட்டி நெருக்கமான நிலையை எட்டியுள்ளது.
Toronto நகரத்தின் அடுத்த நான்கு ஆண்டுகால நகராட்சி பாதையைத் தீர்மானிக்கக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க தேர்தலுக்கு இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இரு வேட்பாளர்களும் இறுதி நேர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரு வேட்பாளர்களும் நகரின் இருவேறு முனைகளில் தங்களது இறுதி பிரசாரக் கூட்டங்களை நடத்தி, வாக்காளர்களை கவரும் இறுதி உத்திகளை சனிக்கிழமை (24) முன்னெடுத்தனர்.
தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய Olivia Chow, அனைவரையும் “வாக்களிக்க வாருங்கள்” என அழைப்பு விடுத்தார்.
Scarborough நகரில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், Scarborough மக்களின் வாக்குகளே இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த வெற்றியாளரை தீர்மானிக்கப் போகிறது என கூறினார்.
தனது எதிர்த்தரப்பு வேட்பாளர் Brad Bradford இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் நகரைக் கடந்த காலப் பின்னோக்கிய பாதைக்கு எடுத்துச் சென்றுவிடுவார் என Olivia Chow எச்சரித்தார்.
மறுபுறம் Etobicoke நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட Brad Bradford, Toronto நகரம் மாற்றத்திற்குத் தயாராகியுள்ளதாக குறிப்பிட்டார்.
Toronto நகரின் ஸ்தம்பித நிலைக்கு Olivia Chow முன்னெடுக்கும் தவறான நிர்வாகமே காரணம் எனவும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய Brad Bradford சாடினார்.
Toronto நகரசபையின் இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (26) காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறவுள்ளது.
