Markham நகரில் Drive Safe For You என்ற விழிப்புணர்வு சமூக நடை பயணம் திங்கட்கிழமை (12) நடைபெற்றது.
Markham Road & Steeles Avenue சந்திப்பில் அமைந்துள்ள John Daniels பூங்காவில் ஒன்று திரண்டவர்கள் இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர்.
Drive Safe For You என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் மௌன ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி உணர்ச்சிப்பூர்வமான நடை பயணத்தை முன்னெடுத்தனர்.
Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
Markham – Elson சந்திப்புக்கு அருகில் ஒரே குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என மூவர் மரணமடைந்தனர்.
இவர்கள் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான பதீரன் புவனேந்திரன், முன் இருக்கையில் பயணித்த 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதன், பின் இருக்கையில் பயணித்த 23 வயதான நிலுஷ்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின் நினைவாகவும், பாதுகாப்பான சாலை உள்கட்டமைப்பை வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெற்றது.
தனது குடும்பத்தை இழந்த தந்தை இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை முன்னெடுத்தார்.
மூன்று தமிழர்கள் பலியான இந்த விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுநர் நிரபராதி என இந்த ஆண்டின் April மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது தமிழர் சமூகத்தில் பெரும் எதிர்வலைகளை ஏற்படுத்தியது.
