அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கையின் விளிம்பில் கனடா உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்து வருவதாக கனடாவுக்கான அமெரிக்க தூதர் Pete Hoekstra கூறினார்.
Tariffs வரிகளை அகற்றுவது குறித்த கலந்துரையாடல்களில் கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த விடயத்தில் G7 தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக Donald Trump அரசுடன் உடன்படிக்கைக்கு வரும் பேச்சுக்களில் கனடிய பிரதமர் Mark Carney ஈடுபட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மாதம் இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் நேரடியாக சந்தித்த பின்னர், இருவரும் தனியே தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்து, இரு தலைவர்களும் மாலை வேளைகளில் சில தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடுவதை தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
இந்த உரையாடல்கள் கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக போரில் ஒரு இணக்கம் காண்பது குறித்து அமைந்துள்ளதாக தெரியவருகிறது.