Alberta மாகாணப் பிரிவினை குறித்த பொது வாக்கெடுப்புக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு ஆரம்பமாகிறது.
செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பிக்கும் இந்த முன்கூட்டிய வாக்குப்பதிவு எதிர்வரும் சனிக்கிழமை (17) வரை தொடர்கிறது.
இந்த 5 நாட்கள் நடைபெறும் முன்கூட்டிய வாக்குப்பதிவின் போது, மாகாணம் முழுவதும் உள்ள 310 வாக்குச்சாவடி மையங்கள் காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும் என Alberta தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
இந்த வாக்களிப்பில் நீண்ட வரிசைகள் சாத்தியம் எனவும் தேர்தல் திணைக்களம் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதில் October 19 அன்று இறுதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, இந்த முன்கூட்டிய வாக்குப்பதிவு வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த பொது வாக்கெடுப்பில் வழக்கத்திற்கு மாறாக வாக்காளர்களுக்கு 10 வெவ்வேறு கேள்விகள் அடங்கிய 10 வாக்குச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.
இதில் முதல் 9 கேள்விகள் குடியேற்றம், நாட்டின் அரசியலமைப்பு சார்ந்த விவகாரங்கள் பற்றியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
10-வது கேள்வி கனடாவிலிருந்து Alberta மாகாணம் பிரிந்து தனி நாடாக செல்வதற்கான சட்டப்பூர்வ பொதுவாக்கெடுப்பு செயல்முறையை ஆரம்பிக்கலாமா என்பது பற்றியதாகும்.
மாகாண முதல்வர் Danielle Smith, வாக்காளர்களை முதல் 9 கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று வாக்களிக்குமாறு கோரியுள்ளார்.
இதன் மூலம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாகாண அரசுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Alberta வரலாற்றில் இல்லாத வகையில் இந்த பொது வாக்கெடுப்பிற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
2023 மாகாணத் தேர்தலில் 59,000 பேர் மட்டுமே சிறப்பு வாக்குச் சீட்டுகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது சுமார் 6,500,00 பேர் சிறப்பு வாக்குச் சீட்டுகளுக்கு விண்ணப்பித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
அண்மைய Ipsos கருத்துக் கணிப்பின்படி, 81 சதவீத Alberta மக்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்களையும், 10 வினாத்தாள்கள் போன்ற வாக்கு சீட்டுகளையும் கையாள்வதற்காக தேர்தல் திணைக்களம் இதுவரை 44,000-க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
இந்த வாரம் Alberta மாகாணத்திற்கு நேரடியாக செல்லவுள்ள பிரதமர் Mark Carney, பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre ஆகியோர் பிரிவினைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
