Atlantic கடலில் மாயமான Ontario மாகாணத்தின் அவசர சிகிச்சை விமானத்திற்கான தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
Ontario மாகாணம் Hamilton நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் Air Ambulance மருத்துவ மீட்பு விமானம் ஒன்று நான்கு கனடியர்கள் உட்பட 6 பேருடன் வார இறுதியில் காணாமல் போனது.
காணாமல் போன விமானம் Hamilton நகரைத் தளமாகக் கொண்ட Latitude Air Ambulance நிறுவனத்துக்குச் சொந்தமான Gulfstream G100 ரக jet விமானமாகும்.
இந்த விமானம் நோயாளி உட்பட 6 பேருடன் அமெரிக்காவின் Massachusetts கடல் பகுதியில் திடீரென காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விமானத்தை தேடி கண்டுபிடிக்க அமெரிக்கக் கடலோரக் காவல் படையினர் (U.S. Coast Guard) கப்பல்கள், விமானங்கள் மூலம் கடலில் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
இந்த தேடுதலின் விளைவாக அமெரிக்க கடலோர காவல்படை சனிக்கிழமை (03) Nantucket கடற்கரையோரம் ஒரு சிதைவுப் பகுதியை கண்டறிந்தது.
அவர்கள் தீவிரமாகத் தேடி வந்த பகுதியில் தான் இந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, விமானத்தில் பயணித்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என கடலோர காவல்படை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தீவிர தேடுதல் மீட்பு நடவடிக்கை முயற்சி ஞாயிற்றுக்கிழமை (04) கைவிடப்பட்டது.
அமெரிக்க கடலோர காவல் படை இந்தச் செய்தியை அதிகாரப்பூர்வமாக ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியது.
நான்கு கனடியர்கள், இரண்டு Bermuda நாட்டினர் உள்ளிட்ட 6 பேருக்காக, Nantucket கடற்கரையோரம் சுமார் 7,150 சதுர KM பரப்பளவில் தீவிரமாக தேடியும் எவரையும் மீட்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
“ஒரு தேடுதல் வேட்டையை நிறுத்துவது என்பது அவ்வளவு எளிதான முடிவு அல்ல” என இந்த முடிவு குறித்து வடகிழக்கு மண்டல Rear Admiral Matthew Lake தெரிவித்தார்.
இந்தத் துயரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் அவர்களது அன்பிற்குரியவர்களுக்கும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும், அந்த விமானத்தை கண்டறிவதற்கான அடுத்தகட்ட தேடுதல் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
