கனடிய விண்வெளி வீரர் Joshua Kutryk வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
NASA-வின் வணிக ரீதியிலான விண்கலத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்ற முதலாவது கனடியர் என்ற பெருமையை 44 வயதான இவர் பெற்றுள்ளார்.
கனடாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய வரலாற்று மைல்கல்லாக இந்தத் தருணம் நோக்கப்படுகிறது.
Joshua Kutryk பயணித்த SpaceX நிறுவனத்தின் Crew-13 விண்கலம், 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
விண்வெளிப் பயண நிபுணரான Joshua Kutryk-குடன் மேலும் இரண்டு NASA விண்வெளி வீரர்கள் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொண்டனர்.
விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த இவர்களை அங்கு ஏற்கனவே தங்கியிருக்கும் 7 விண்வெளி வீரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு அங்கேயே தங்கி பல்வேறு அதிநவீன அறிவியல் சோதனைகள், விண்வெளி நிலைய பராமரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
உலக அரங்கில் கனடாவின் விண்வெளிப் பிரதிநிதித்துவத்தை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளது பெருமையாக உள்ளது என விண்வெளி நிலையத்தை அடைந்த பின் NASA நேரடி ஒளிபரப்பில் பேசிய Joshua Kutryk கூறினார்.
விண்வெளி வீரர் Joshua Kutryk விண்வெளியில் அடுத்த 6 மாதங்கள் தங்கியிருக்க உள்ள இக்காலகட்டத்தில், அவரது மனைவி தங்களது மூன்றாவது குழந்தையை பூமியில் பெற்றெடுக்க உள்ளார் என்ற நெகிழ்ச்சியான குடும்பத் தகவலும் வெளியாகியுள்ளது
