கனடாவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மிகவும் கடினமானவை என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer தெரிவித்தார்.
கனடாவுடனான தற்போதைய கடுமையான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளுக்கும் இடையே தீர்ப்பதற்கு மிகவும் கடினமான பல முக்கியப் பிரச்சினைகள் எஞ்சியுள்ளதாக அவர் கூறினார்.
கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான தனது முதன்மையான தொடர்பு அதிகாரி கனடா-அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் Dominic LeBlanc எனவும், தற்போதைய வர்த்தக முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும் தாங்கள் இருவரும் தொலைபேசியில் உரையாடி வருவதாகவும் Jamieson Greer தெரிவித்துள்ளார்.
Milwaukee-யில் நடைபெற்ற G20 வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், வியாழக்கிழமை (01) செய்தியாளர்களிடம் பேசிய போது இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (30) கனடாவின் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் Maninder Sidhu, அமெரிக்க வர்த்தக தூதர் Jamieson Greer ஆகிய இருவருக்கும் இடையே தனியாக ஒரு உரையாடல் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, கனடா – அமெரிக்கா இடையேயான தற்போதைய வர்த்தக முட்டுக்கட்டைகள் குறித்தும், உலக வர்த்தக அமைப்பில் (WTO) கொண்டு வரப்பட வேண்டிய புதிய சீர்திருத்தங்கள் குறித்து தான் அமெரிக்க தூதரிடம் நேரடியாக வலியுறுத்தியதாக அமைச்சர் Maninder Sidhu உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump “அடுத்த சில வாரங்களில் கனடாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும்” எனத் தொடர்ந்து கணித்து வரும் வேளையில், அவரது வர்த்தகத் தூதவர் பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமெரிக்கா தரப்பிலிருந்து நீட்டப்பட்டுள்ள ஒரு சமாதானக் கொடியாக இது இருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
